இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கியது. நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களை குவித்து இருந்தது. இன்று ஐந்தாவது நாளில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் களமிறங்கினர். போட்டியின் கடைசி நாளான இன்று ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே ரகானே வெளியேறினார்.
அதன்பிறகு புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். புஜாரா ஒருபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கினார். இந்தியா வெற்றி இலக்கை நோக்கி முன்னேற ரிஷப் பண்ட் தனது வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் 97 ரன்களை அவர் எடுத்திருந்த போது எதிர்பாராதவிதமாக சிக்ஸ் அடிக்க முயற்சித்தது ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை அடுத்து விஹாரி மற்றும் புஜாரா ஆகியோர் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 77 ரன்கள் எடுத்த புஜாரா ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கியது. மேலும் போட்டி முடிய இன்னும் 50 ஓவர்கள் கிட்டத்தட்ட இருந்ததால் இந்திய அணி தோல்வி அடையும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் விஹாரி உடன் இணைந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்று போட்டியை டிராவில் முடித்தனர்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களையும், 128 பந்துகளைச் சந்தித்த அஸ்வின் 39 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் காரணமாக இந்திய அணி டிரா செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் வேண்டுமென்றே இந்திய வீரர்களிடம் வம்புக்கு இழுக்கும் நிகழ்வு அதிகம் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் பேட்டிங் செய்து கொண்டிருந்த தமிழக வீரர் அஸ்வின் நோக்கி கிண்டல் செய்யும் வகையில் பல கருத்துக்களை மைதானத்தில் தெரிவித்துக் கொண்டே இருந்தார்.
குறிப்பாக நீங்கள் அடுத்த போட்டிக்கு பிரிஸ்பேனில் விளையாடும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. உங்களுடன் விளையாட மிக ஆவலாக உள்ளோம் அவர் தெரிவித்தார். அதற்கு பதிலடி கொடுத்த அஸ்வின் “அதேபோல் நீங்கள் இந்தியாவிற்கு வாங்க அதுதான் உங்களுக்கு கடைசி தொடராக இருக்கும்” நாங்களும் உங்களுடன் விளையாட ஆவலாக இருக்கிறோம் என்று பதிலுக்கு பதில் கொடுத்தார்.
I want Ashwin’s autograph 😂. Roasted the “temporary captain” Tim Paine#INDvAUS #stevesmith #Wade #Ashwin #TimPaine pic.twitter.com/IkH8SoYKzS
— ARYAN TRIPATHI (@AryanTripathi_2) January 11, 2021
மேலும் அஸ்வினை சில வார்த்தைகள் கெட்ட வார்த்தையில் திட்டிய பின் தொடர்ந்து அவரை சீண்டிக்கொண்டே இருந்தாலும் அஸ்வின் ஆட்டத்தின் மீது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார் இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த உரையாடல் தற்போது இணையத்திலும் வீடியோவாக வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.