தமிழக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2010 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை அவர் மொத்தம் 78 டெஸ்ட் போட்டிகள் 111 ஒருநாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் 2017 ஆம் ஆண்டு முதல் விளையாடாமல் இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணியின் முக்கிய வீரராக பங்கேற்று விளையாடி வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியோடு சேர்த்து மொத்தம் 79 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 410 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 30 முறை 5 விக்கெட்டுகளையும், ஏழு முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னேறி வருகிறார்.
இந்திய அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4-வது வீரராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரராக திகழ்கிறார். இந்நிலையில் தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது :

வீரர்கள் எப்போதும் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவர்கள் மீது விமர்சனங்கள் எழும் அதே போன்று நானும் பலமுறை விமர்சிக்கப்பட்டு உள்ளேன். ஆனால் அதைப் பற்றி யோசிப்பதே கிடையாது நானும் சாதாரண மனிதன் தான். எப்பொழுதும் புதிது புதிதாக முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருப்பேன் மேலும் என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னிடம் உள்ளது.

ஒருவேளை என்னுடைய ஆட்ட திறனை எப்போது மேம்படுத்திக்கொள்ள விரும்பவில்லையோ அப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து விடுவேன் என நேரடியான பதிலை அஸ்வின் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



