தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இதற்கு முன்னதாக நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ் தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பான ரெக்கார்டை வைத்திருந்த அஸ்வினுக்கு அந்த தொடரில் விளையாட வாய்ப்பு வழங்காதது பற்றி ஏற்கனவே சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய மண்ணில் தற்போது 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அஷ்வின் 7 விக்கெட் வீழ்த்தியது அசத்தினார்.
அதன்பிறகு இந்த போட்டி குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது : எனக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பது கடினமான ஒரு விடயமாகும். ஏனெனில் எனக்கு இந்திய அணிக்காக விளையாடுவது அவ்வளவு பிடிக்கும். கிட்டதட்ட இந்திய அணியில் விளையாடாத இந்த நாட்களை நான் உள்ளூர் கிரிக்கெட் விளையாடியே கழித்தேன். இங்கிலாந்து சென்று கவுன்டி போட்டியில் ஆடினேன். இந்த 9 மாதங்களுக்கு என்னால் தேசிய அணிக்காக விளையாடமுடியாமல் இருந்தது மிகவருத்தத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் பிரீமியர் லீக் போட்டியில் முடிந்த அளவுக்கு ஆடினேன். சென்னையில் நடந்த லீக் போட்டிகளிலும் பங்கேற்றேன் ஏனெனில் இவை எல்லாம் எனக்கு முக்கியமானவை நான் அந்தப் போட்டிகளில் விளையாடி தான் தேசிய அணிக்கு தேர்வானேன். எனவே கிரிக்கெட் ஆடுவது என்பது எனக்கு எப்போதும் சிறப்பானது மேலும் இந்திய அணிக்காக விளையாடி 5 விக்கெட் விழுவதெல்லாம் பெருமையான விடயம் என்று தனது மனதில் இருந்த விடயங்களை அஸ்வின் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.