இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி அண்மையில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டி இரண்டு நாட்களில் முடிவடைந்ததால் இந்த மைதானம் தயாரிக்கப்பட்ட விதம் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் மற்றும் இங்கிலாந்து வீரர்களும் குற்றசாட்டு வைத்துள்ளனர்.

மேலும் மோசமாக தயாரிக்கப்பட்ட இந்த மைதானத்தினால்தான் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் மீண்டும் மார்ச் 4 ஆம் தேதி மீண்டும் அதே மைதானத்தில் போட்டி துவங்க நடைபெற இருக்கும் நிலையில் இந்த மைதானத்தின் தன்மை குறித்து பல்வேறு விமர்சகர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் செய்தியாளர்களுடன் ஆன்லைனில் கலந்துரையாடிய போது நிருபர் இந்த மைதானத்தின் தன்மை குறித்து நிறைய கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து அஷ்வின் பதிலளிக்கையில் : நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நல்ல பிட்ச் என்றால் என்ன ? அதற்கு ஏதேனும் விதிமுறைகள் இருக்கிறதா ? கிரிக்கெட் என்றாலே பாலுக்கும் பேட்டுக்கும் போட்டிதான்.

பவுலர்களுக்கு போட்டியை வென்றாக வேண்டும். பேட்ஸ்மேன்களுக்கும் போட்டியை வென்றாக வேண்டும். பேட்ஸ்மேன்களுக்கு திறமையாக வென்று ரன்களை சேர்க்க வேண்டும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நல்ல பிட்ச் என்றால் என்ன ? யார் அதனை தீர்மானிக்கிறார்கள் ? டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, அடுத்த மூன்று நாட்கல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமா ? அது என்ன கணக்கு ? இதுபோன்ற விதிமுறைகள் எல்லாம் யார் கொண்டு வந்தார்கள்.

இப்போது அதையெல்லாம் தாண்டி நாம் செல்ல வேண்டும். எப்படிப்பட்ட ஆடுகளத்தை கொடுத்தாலும் விளையாட வேண்டும், அது குறித்து மட்டுமே தான் யோசிக்க வேண்டும். எனக்கு தெரிந்து இந்த மைதானத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது என்று அஷ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



