
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இந்திய அணிக்காக பத்து ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கழற்றிவிடப்பட்ட போதும் டெஸ்ட் போட்டிகளில் தனது அபாரமான ஆட்டத்தை இன்றுவரை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் பங்கேற்கும் முன் கிரிக்பஸ் இணையதளத்திற்கு அஸ்வின் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : முதன்முறையாக நான் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் சந்தித்த விஷயம் அது. வழக்கமாக நான் விளையாட சென்ற மைதானத்தில் அங்கே ஒருவரது பவுலிங் ஸ்டைல் ஆக்சன் மிகவும் நேர்த்தியாக இருந்தது. அவர் தொடர்ந்து சிறப்பான பந்துகளை பேட்ஸ்மேன்கள் சிரமப்படும் விதத்தில் தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தார்.
அவரது பந்து அவ்வளவு சிறப்பாக ஸ்பின் ஆனது. அப்பொழுது நான் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பேட்ஸ்மேன் ஆனால் என்னாலும் அந்த பந்தை சரியாக கணித்து அடிக்க முடியவில்லை அதன்பின்பு நான் அவரிடம் இருந்து அந்த பந்துவீச்சு முறையை கற்றுக் கொள்ள ஆவலாக கேட்டுக்கொண்டேன். அவரின் பெயர் எஸ்கே அதுமட்டும் தான் எனக்கு இன்றுவரை தெரியும். அதன்பின்னர் 15 நாட்கள் தொடர்ந்து அவரிடம் காலையில் பயிற்சிக்கு சென்று அந்த கேரம் பால் முறையை கற்றுக் கொண்டேன்.
அதன்பின் நான் சர்வதேச கிரிக்கெட் வீரராக மாறிய பின்னர் என்னால் அவரை பார்க்க முடியவில்லை. அவரை இன்று வரை தேடிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று அஸ்வின் ஓபனாக கூறினார். ஏற்கனவே இதே போன்று தனது பேட்டிங் டிப்ஸ் கொடுத்த ஓட்டல் ஊழியரை சச்சின் தேடி அந்த செய்தி இணையத்தில் பரபரப்பாகி கடைசியில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.