இது வெறும் பிரேக் தான், அடுத்த வருடம் முதல் மீண்டும் அவர்தான் தான் ஆர்சிபி கேப்டன் – அஷ்வின் கணிப்பு

Ashwin
- Advertisement -

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்தத் தொடர் முழுவதும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் விளையாடப்பட உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளும் சேர்ந்துள்ளதால் பெரிய அளவில் விரிவடைந்துள்ள ஐபிஎல் தொடர் 74 போட்டிகள் கொண்ட தொடராக ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

IPL 2022

- Advertisement -

டு பிளேஸிஸ் தலைமையில் பெங்களூரு:
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் மும்பை நகரில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இதுநாள் வரை ஒருமுறைகூட கோப்பைய வெல்லாத டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்ல தயாராகி வருகின்றன. அந்த வகையில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அனுபவ நட்சத்திர வீரர் பப் டு ப்லஸ்ஸிஸ் தலைமையில் இந்த முறை எப்படியாவது முதல்முறையாக கோப்பையை முத்தமிட்டடே தீரவேண்டும் என்ற லட்சியத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்க உள்ளது.

ஏனெனில் இதற்கு முன் அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற நட்சத்திர கேப்டன்கர்ளின் தலைமையில் கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் விளையாடிய போதிலும் பைனல் வரை சென்ற அந்த அணி முக்கியமான நேரத்தில் சொதப்பி கோப்பையை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த காலங்களில் கற்ற பாடத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய கேப்டன் தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி முதல் முறையாக தங்கள் அணி கோப்பையை வெல்லும் என பெங்களூர் அணி ரசிகர்கள் நம்புகிறார்கள்.

faf du plessis RCB

வெறும் பிரேக் தான்:
முன்னதாக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திரம் விராட் கோலி 2021 வரை தன்னால் முடிந்தவரை பேட்டிங்கில் மலைபோல ரன்களை குவித்து முழு மூச்சுடன் கேப்டன்ஷிப் செய்து போராடிய போதிலும் ஒரு முறை கூட கோப்பையை வாங்க முடியவில்லை. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த அவர் பணிச்சுமை காரணமாக சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது பெங்களூரு அணியின் கேப்டன் பதவிக்கும் முழுக்கு போட்டார்.

- Advertisement -

அந்த வேளையில் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த வீரர்களை வாங்க முயன்ற பெங்களூரு அணி நிர்வாகம் அந்த முயற்சியில் தோல்வியடைந்ததால் வேறு வழியின்றி அனுபவம் வாய்ந்த டு ப்லஸ்ஸிசை தங்களின் கேப்டனாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது பெங்களூர் அணியில் சாதாரண வீரராக விளையாடும் விராட் கோலி வரும் காலங்களில் மீண்டும் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என தமிழக நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கணித்துள்ளார்.

Ashwin

இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு கேப்டனாக கடந்த சில வருடங்களில் விராட் கோலி மிகப்பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாகி மனதளவில் பாதிப்படைந்ததாக நான் உணர்கிறேன். எனவே இந்த வருடம் அவருக்கு ஒரு தற்காலிகமான ஓய்வு நிறைந்த இடைவேளை போன்றது. அடுத்த வருடமே கூட அவரை மீண்டும் தங்கள் அணியின் கேப்டனாக பெங்களூரு நிர்வாகம் நியமிக்கலாம் என எனக்கும் தோன்றுகிறது” என கூறினார்.

- Advertisement -

காரணம் இதுதான்:
இதை வெறும் வார்த்தைகளாக கூறாத ரவிசந்திரன் அஸ்வின் அதற்கான காரணத்தையும் கணித்துள்ளார். அதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட் வாழ்வில் தனது கடைசி வருடங்களில் டு பிளேஸிஸ் விளையாடி வருகிறார். சொல்லப் போனால் அடுத்த 2 – 3 வருடங்கள் மட்டுமே அவரால் விளையாட முடியும். இருப்பினும் அவரது அனுபவத்தை கருதி அவரை கேப்டனாக நியமித்துள்ளது உண்மையாகவே நல்ல முடிவாகும். அவர் அணி வீரர்களிடம் நிறைய அனுபவங்களை எடுத்து வருவார். மேலும் எம்எஸ் தோனியின் கேப்டன்ஷிப் ஸ்டைல் போலவே தமது கேப்டன்ஷிப் இருக்கும் என அவரே கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

Kohli

அதாவது தற்போது 37 வயதை கடந்துள்ள டு ப்லஸ்ஸிஸ் குறைந்தது அடுத்த 2 – 3 வருடங்கள் மட்டுமே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் அடுத்த ஒரு சில வருடங்களில் அவர் ஓய்வு பெற்றால் தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள விராட் கோலி மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மும்பையை சேர்ந்த 22 வயது வீரருக்கு சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இடமா? – என்ன இதெல்லாம்?

அதற்க்கு ஏற்றாற்போல் கடந்த 2008 முதல் தொடர்ந்து ஒரு சீசனை கூட தவற விடாமல் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி அந்த அணி நிர்வாகத்திடமும் ரசிகர்களிடமும் நல்ல பெயரைப் பெற்றுள்ளார். மேலும் இந்தியாவின் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் விலகிவிட்ட காரணத்தால் வரும் காலங்களில் பெங்களூர் அணிக்காக கேப்டன்ஷிப் செய்வது மிகப்பெரிய பணிச்சுமையை ஏற்படுத்தாது. எனவே அடுத்த வருடமே பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி நியமிக்கப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என அஷ்வின் தெரிவித்துள்ளார்.

Advertisement