இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்னும் சில நிமிடங்களில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்றும் எந்த வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக இருக்கும் கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பெரிய ரன் குவிப்பில் ஈடுபட வாய்ப்புள்ளது.
அதேபோன்று வில்லியம்சனின் பேட்டிங்கை தடுத்து நிறுத்தி அவரை வீழ்த்தும் இந்திய வீரரும் அணியில் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் வில்லியம்சனுக்கு எதிராக இந்திய அணியின் அஸ்வின் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று நடைபெற்று முடிந்த போட்டிகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவது மட்டுமின்றி எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்குள்ள பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்து வருகிறார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 409 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள அவர் 207 முறை இடதுகை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் காரணமாக இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது சிறப்பான பந்துவீச்சை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வில்லியம்சனுக்கு எதிராகவும் அவரது ரெக்கார்டு சிறப்பாக உள்ளது. இதுவரை ஐந்து இன்னிங்ஸ்களில் வில்லியம்சனுக்கு எதிராக பந்து வீசியுள்ள அஷ்வின் அதில் நான்கு முறை அவரை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த அணியின் மற்றொரு முக்கிய வீரரான ராஸ் டெய்லரையும் அஸ்வின் மூன்று முறை வீழ்த்தியுள்ளார்.
இதனால் நிச்சயம் அஸ்வின் இந்த போட்டியில் இந்திய அணிக்கு துருப்பு சீட்டாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து அணி இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற ஆர்வம் காட்டும். அதே வேளையில் இந்திய அணியும் நியூசிலாந்து அணிக்கு எதிராக கடுமையான போராட்டத்தை அளிக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.