யார் இந்த அர்சான் நக்வஸ்வாலா ? இந்திய டெஸ்ட் அணியில் இவர் இடம்பிடிக்க என்ன காரணம் ? – விவரம் இதோ

Nagwaswalla
- Advertisement -

ஜுன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவுள்ளன. இப்போட்டி முடிந்தவுடனே இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடக்கவிருக்கிறது. இதற்காக இங்கிலாந்து செல்லப்போகும் இந்திய அணியை நேற்று அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் நிர்வாகம். நேற்று அறிவித்த வீரர்களின் பட்டியலில் கூடுதல் வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் அர்சான் நக்வஸ்வாலா ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.

nagwaswalla 2

- Advertisement -

இதில் ஈஸ்வரன், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா இந்த மூவரும் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள். ஆனால் மற்றொரு வீரரான அர்சான் நக்வஸ்வாலாவை யாருக்கும் அவ்வளவாக தெரியாததால், அவரைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். யார் இந்த இளம் வீரர்? இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு அப்படி என்ன செய்திருக்கிறார்? அவரைப் பற்றிய முழு விவரத்தையும் நாங்கள் இங்கு கொடுத்துள்ளோம்.

இருபத்தி மூன்றே வயதுடைய, இடது கை வேகப் பந்து வீச்சாளரான அர்சான் நக்வஸ்வாலா, எந்த கிரிக்கெட் பின்னனியும் இல்லாத குடும்பத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் பிறந்தார். அவருடைய அண்ணனுடன் கிரிக்கெட் விளையாட தொடங்கிய அர்சானுக்கு பந்து வீசும் திறமை இயல்பாகவே அமைத்திருந்ததால், லிஸ்ட் A கிரிக்கெட்டில் 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய அவருக்கு, அத்தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

nagwaswalla 3

குறிப்பாக மும்பைக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்த அர்சான் அதே ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் தர கிரிக்கெட் தொடரில் பரோடா அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். ஆனால் அவரால் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. முதல்தர கிரிக்கெட்டில் சொதப்பி இருந்தாலும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், தமிழ்நாடு அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் தேர்வாளர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

- Advertisement -

அதற்குப் பிறகு 2019-2020 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி ட்ராபியில் குஜராத் அணிக்காக களமிறங்கிய அர்சான், அத்தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதுதான் அவருடைய வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்த தருணம். ரஞ்சி ட்ராபியில் சிறப்பாக செயல்பட்ட தன்னம்பிக்கையோடு, 2021 ஆம் ஆண்டுக்கான சையத் அலி முஷ்டாக் தொடரில் பங்கு பெற்ற அவர், அத்தொடரில் 9 விக்கெட்டுகளையும், அதற்குப் பிறகு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய தேர்வுக் குழுவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தோடு மட்டுமல்லாமல் இந்திய டெஸ்ட் அணியிலும் தன் பெயரை பதிவு செய்திருக்கிறார்.

nagwaswalla 1

இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் காயம் காரணமாக இந்த டெஸ்ட் அணி வீரர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை எனவே அவருக்கு மாற்றாக தான் அர்சான் நக்வஸ்வாலா இடம் பெற்றிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் கடந்து ஆஸ்திரேலியா தொடரில் நடராஜனும் இந்திய அணிக்கு நெட் பௌலராக தேர்வாகி பிறகு தான் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் அதிர்ஷ்டம் இருந்தால், அர்சான் நக்வஸ்வாலாவும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார்.

Advertisement