
சர்வதேச கிரிக்கெட்டில் 2024 காலண்டர் வருடத்தில் அசத்திய வீரர்களுக்கு ஐசிசி விருதுகளை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு பாகிஸ்தானின் பாபர் அசாம், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்கள்.
அவர்களை முந்திய அர்ஷ்தீப் சிங் 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச டி20 வீரர் என்ற ஐசிசி விருதை வென்றுள்ளார். கடந்த வருடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக விளையாடிய அவர் மொத்தம் 18 போட்டிகளில் 36 விக்கெட்டுகள் எடுத்தார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் மட்டும் 17 விக்கெட்டுகள் எடுத்த அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார்.
அதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் சமன் செய்தார். அந்த வகையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் சிங் இந்த விருதுக்கு தகுதியானவர் என்றால் மிகையாகாது. மேலும் இதன் வாயிலாக ஒரு வருடத்தின் சிறந்த ஐசிசி வீரர் என்ற விருதை வென்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.
இதற்கு முன் ஐசிசி விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு வருடத்தின் சிறந்த சர்வதேச வீரர் என்ற விருதை ஜஸ்ப்ரித் பும்ரா உட்பட இதுவரை வேறு எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் வென்றதில்லை. இது பற்றி அவர் ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ஐசிசி சர்வதேச டி20 வீரர் விருதை வென்றது நல்ல உணர்வை கொடுக்கிறது”
“அதற்காக கடவுளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். பெயர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த உதவிய அனைவருக்கும் நன்றி. 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை கோப்பையை வெல்ல உதவியது கடந்த வருடம் எனக்கு அமைந்த ஸ்பெஷல் தருணம். இந்தியாவுக்காக நல்ல முடிவுகளை கொடுக்க எனது சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 207 ரன்ஸ்.. தரத்தை காண்பித்தாலும்.. துணை கேப்டன் சுப்மன் கில் பஞ்சாப்பை துவம்சம் செய்த கர்நாடகா
இது போக இதுவரை அவர் 60 போட்டிகளில் 97* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற சாதனையையும் அர்ஷ்தீப் சிங் சமீபத்தில் படைத்துள்ளார். அந்த வகையில் அறிமுகமான 3 வருடத்திலேயே அவர் ஆல் டைம் நாயகனாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.