ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய கிரிக்கெட் தங்களுடைய மூன்றாவது போட்டியில் அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜூன் 12ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா வெறும் 111 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஸ்டீபன் டைலர் 24, நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 3, விராட் கோலி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததால் சூரியகுமார் யாதவ் 50*, ரிசப் ஃபண்ட் 18, சிவம் துபே 31* ரன்கள் அடித்து 18.2 ஓவரில் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
ஆட்டநாயகன் அர்ஷ்தீப்:
அதனால் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்று அசத்தியது. மறுபுறம் நேத்ராவால்கர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் அமெரிக்கா தோல்வியை சந்தித்தது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் நியூயார்க் மைதானத்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கான ஐடியாவை தமக்கு பும்ரா தெரிவித்ததாக அர்ஷ்தீப் கூறியுள்ளார். இப்போட்டியில் தம்முடைய திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த செயல்பாடுகளால் மிகவும் மகிழ்ச்சி. கடந்த 2 போட்டிகளில் நான் கொஞ்சம் ரன்களை கொடுத்ததால் திருப்திகரமாக இல்லை. பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கிறது”
“சரியான இடத்தில் பிட்ச் செய்து பந்தை பேச விடுவோம் என்பதே திட்டமாகும். பும்ரா பாயும் இந்த பிட்ச்சில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற வழிகாட்டுதலை எனக்கு காண்பித்தார். நான் எதிரணி எளிதாக அடிப்பதற்கு எந்த பந்தையும் வழங்கவில்லை. எங்களுடைய பேட்ஸ்மேன்களும் இங்கே ரன்கள் அடிப்பதற்கு தடுமாறினர். எனவே கடினமான லென்த்தை அடிப்பதே திட்டமாகும்”
இதையும் படிங்க: 18.2 ஓவரில் அமெரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு கைகொடுத்த இந்தியா.. சூப்பர் 8இல் ஆஸியை சந்திக்க தகுதி
“இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் பிட்ச்சை அதிகமாக பயன்படுத்த வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் நீங்கள் உங்களுடைய உடலையும் தொடர்ச்சியாக கண்காணித்துக் கொள்ள வேண்டும். எங்களுடைய அனைத்து பவுலர்களும் நன்றாக செயல்பட்டனர். இதே போன்ற செயல்பாடுகளை அடுத்த பகுதியிலும் வெளிப்படுத்துவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.