இங்கிலாந்தில் நடைபெற்ற 5 டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்து அசத்தியது. குறிப்பாக கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கிள் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற சிராஜ் 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாடி 23 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் என்ற ஜஸ்ப்ரித் பும்ரா சாதனையையும் சிராஜ் சமன் செய்தார். மறுபுறம் வாய்ப்புக்காக காத்திருந்த அர்ஷ்தீப் சிங் கடைசி வரை பெஞ்சில் அமர்ந்திருந்தார். 2024 டி20 உலகக் கோப்பையில் 27 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
ஃபோர் அடிக்கும் போது:
புதிய பந்தை ஸ்விங் செய்து சிறப்பாக பவுலிங் செய்யக்கூடிய அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நல்ல பவுலராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அதனால் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அடுத்து நடைபெறும் ஆசிய கோப்பையில் அர்ஷ்தீப் சிங் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளையாட தயாராகி வருகிறார்.
இந்நிலையில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் விரக்தியான சூழ்நிலைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை சிராஜ் கற்றுக்கொடுத்துள்ளதாக அர்ஷ்தீப் கூறியுள்ளார். தற்சமயத்தில் 2025 துலீப் கோப்பையில் வடக்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு. “மனதளவில் கடந்த 2 மாதங்களாக சலிப்பான நேரங்களில் எப்படி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டுள்ளேன்”
சிராஜ் ஆலோசனை:
“டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களுடைய வேலையில் சலிப்பு ஏற்படும் நேரம் வரும். குறிப்பாக உணவு இடைவெளிக்கு பிந்தைய செசன், பந்து எந்த உதவியும் செய்யாத போது சூழ்நிலைகளில் எப்படி உங்களால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்? அது பற்றி நான் சிராஜிடம் பேசினேன். அதற்கு உங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்காத சூழ்நிலைகளை எப்படி மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறீர்கள் என்பதே நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்படுகிறீர்கள் என்பதை சொல்லும் என சிராஜ் சொன்னார்”
இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் மட்டுமல்ல ராகுல் டிராவிடும் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற அவர்தான் காரணமாம் – வெளியான தகவல்
“அவர் கொடுத்த இந்த சிறிய உதவிக்குறிப்பை நான் உண்மையில் விரும்புகிறேன். இந்திய டெஸ்ட் அணியுடன் கடந்த சில மாதங்களாக இருந்ததால் நான் நிறைய பவுலிங் செய்து பயிற்சிகளை எடுத்தேன். களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அந்தப் பயிற்சிகள் வாய்ப்பு கிடைக்கும் போது உதவும். ஆசியப் கோப்பைக்காக நான் ஓவல் டெஸ்ட் போட்டியிலேயே வெள்ளைப்பந்தில் பயிற்சிகளை செய்தேன்” என்று கூறினார்.



