
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேலையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 31-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த கடைசி போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட வேண்டியது அவசியம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஏனெனில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பணிச்சுமை காரணமாக இந்த தொடரில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளில் பும்ரா மூன்று போட்டிகளில் விளையாடி விட்டதால் கடைசி போட்டியில் அவருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் பும்ரா இல்லாமல் இந்திய அணி இங்கிலாந்து அணியை தடுத்து நிறுத்துவது கடினம் என்பதனால் நிச்சயம் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்த மூன்று நாட்களிலேயே இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது துவங்க இருப்பதினால் நிச்சயம் அவருக்கு ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஒருவேளை பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டால் அவருக்கு பதிலாக விளையாடப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் ஒருவேளை அவர் ஓய்வு எடுத்துக்கொண்டால் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஏனெனில் நான்காவது போட்டியிலேயே அர்ஷ்தீப் சிங் அறிமுக வாய்ப்பை பெற வேண்டியது. ஆனால் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் நான்காவது போட்டியில் விளையாட முடியாமல் போனது.
இதையும் படிங்க : அதையெல்லாம் செஞ்சு சம்பாரிச்ச மரியாதையை பென் ஸ்டோக்ஸ்.. ஒரே நாளில் இழந்துட்டாரு.. ஃகைப் விமர்சனம்
அப்படி அவர் காயமடைந்ததால் அன்ஷுல் கம்போஜிக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறிய அன்ஷுல் கம்போஜ் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதனால் நிச்சயம் அவர் கடைசி போட்டியில் இடம்பெற மாட்டார். எனவே காயத்தில் இருந்து மீண்டுள்ள அர்ஷ்தீப் சிங்கே விளையாடுவார் என்று தெரிகிறது.