ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற இந்த தொடரில் ஆரம்பம் முதலே இந்தியா அபாரமாக விளையாடியது. குறிப்பாக லீக் சுற்றில் அயர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், இலங்கை ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.
அதே வேகத்தில் செமி ஃபைனலில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து தோற்கடித்து வெளியேற்றிய இந்தியா மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது. மேலும் 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்த அவமானத் தோல்விகளையும் இந்தியா நிறுத்தியுள்ளது.
அர்ஷ்தீப் சாதனை:
இந்த தொடருடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 நட்சத்திரங்கள் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக இந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 15 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு தொடர்நாயகன் விருதை வென்றார்.
அதே போல இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தம்முடைய பங்கிற்கு சிறப்பாக பந்து வீசி பும்ராவுக்கு நிகராக எதிரணிகளுக்கு சவாலை கொடுத்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் ஃபைனல் உட்பட மொத்தம் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை அர்ஷ்தீப் சிங் சமன் செய்துள்ளார்.
இதற்கு முன் இதே தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கியும் 17 விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். அதே போல ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜஸ்ப்ரித் பும்ரா 15 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க: ரோஹித் செய்த உணர்ச்சிமிக்க செயல்.. மெஸி, ஜோக்கோவிச்சுடன் ஒப்பிட்டு ஃபிபா, விம்பிள்டன் பாராட்டு
இருப்பினும் பலமுறை மாஸ்டர் கிளாஸ் நிகழ்த்திய பும்ரா அளவுக்கு அவர் ரசிகர்களால் பாராட்டப்படவில்லை என்றே சொல்லலாம். ஆனாலும் சத்தமின்றி தமக்கு கொடுக்கப்பட்ட வேலையில் கச்சிதமாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங் இளம் வயதிலேயே டி20 உலகக் கோப்பை சாம்பியனாக சாதனை படைத்துள்ளார். அதனால் வரும் காலங்களில் அவருக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.



