ஒரு வழியா நமக்கு அடுத்த ஜஹீர் கான் கிடைச்சுட்டாரு, கலக்கப் போறாரு பாருங்க – இளம் வீரருக்கு அனில் கும்ப்ளே பாராட்டு

Kumble
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அடுத்ததாக நெதர்லாந்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்தும் போது ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்ததால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது.

அப்போது பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்திய விராட் கோலி வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி 82* (53) ரன்கள் குவித்து அசாத்தியமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அப்படி அபாரமாக விளையாடிய அவரது ஆட்டம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களின் ஆட்டத்தை மறைத்தது என்றே கூறலாம். குறிப்பாக பாகிஸ்தானின் ஆணிவேராக கருதப்படும் பாபர் அசாமை கோல்டன் டக் அவுட் செய்து உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேனாக திகழும் முஹம்மது ரிஸ்வானை 4 (12) ரன்களில் காலி செய்த இளம் வீரர் அரஷ்தீப் சிங் மொத்தமாக 4 ஓவரில் 32 ரன்களைக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து 8.00 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்து வீசினார்.

- Advertisement -

அடுத்த ஜாஹீர் கான்:
கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அசத்தியதால் 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான இவர் ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு குறைந்த ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுக்கும் பந்து வீச்சாளராக தன்னை அடையாளப்படுத்தி பாராட்டுக்களை அள்ளினார். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளராக டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியதால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இந்தியாவுக்காகவும் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கேட்ச் விட்டது, தென் ஆப்பிரிக்க தொடரின் ஒரு போட்டியில் ரன்களை வாரி வழங்கியது போன்ற பின்னடைவுகளை சந்தித்த அவர் அதிலிருந்து மீண்டெழுந்து ஜஸ்பிரித் பும்ரா இல்லாத குறை தெரியாத அளவுக்கு இந்த உலகக் கோப்பையில் அசத்த துவங்கியுள்ளார். இந்நிலையில் ஜாம்பவான் ஜாஹீர் கானுக்கு பின் தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை தேடிய இந்தியாவின் நீண்டகால பயணத்தின் பரிசாக அரஷ்தீப் சிங் கிடைத்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் தாம் பயிற்சியாளராக இருந்த பஞ்சாப் அணியில் அறிமுகமாகி இன்று இந்தியாவுக்கு விளையாடும் அளவுக்கு உயர்ந்துள்ள அவரைப்பற்றி சமீபத்திய பேட்டியில் கும்ப்ளே பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அரஷ்தீப் நல்ல முதிர்ச்சடைந்துள்ளதை நான் பார்க்கிறேன். அதிலும் ஜாஹீர் கான் இந்தியாவுக்கு என்ன செய்வாரோ அதை அவர் தற்போது செய்கிறார். அந்த வகையில் அவர் வருங்காலத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த வீரராக வருவார் என்று எதிர்பார்க்கிறேன். இந்த இடத்துக்கு அவர் வந்த விதத்தையும் நான் பாராட்டுகிறேன். அவருடன் கடந்த 3 வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் இணைந்து செயல்பட்ட நான் அவரை அருகிலிருந்து பார்த்துள்ளேன். மேலும் அழுத்தத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த ஐபிஎல் தொடரில் அவர் செயல்பட்டார்”

“அவர் இந்திய அணிக்காக கடினமான ஓவர்களை வீசுகிறார். அதனால் எப்போதும் நீங்கள் அவர் எவ்வளவு விக்கெட் எடுக்கிறார் என்பதை பார்க்காமல் போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்துவதையும் பார்க்க வேண்டும். அதைவிட 90000 ரசிகர்கள் இருந்த மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய சவாலான போட்டியில் தன்னுடைய பதற்றத்தை அவர் கட்டுப்படுத்திய விதம் சிறப்பானது” என்று கூறினார்.

அவர் கூறுவது போல இளம் வயதிலேயே புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுக்களை எடுக்கும் திறமை பெற்றுள்ள அரஷ்தீப் சிங் டெத் ஓவர்களிலும் சிறப்பாக செயல்படும் திறமை பெற்றுள்ளார். அப்படி ஆரம்ப நாட்களிலேயே நல்ல திறமையை வெளிப்படுத்தும் அவர் நாட்கள் செல்லச் செல்ல இன்னும் அனுபவத்தை கற்று ஜாகீர் கான் போல வருவார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement