- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : டி20 கிரிக்கெட்டில் அஜித் அகார்கருக்கு அடுத்து அர்ஷிதீப் சிங் செய்த சாதனை – முழுவிவரம்

ஜூலை 7-ஆம் தேதியான நேற்று இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சௌதாம்ப்டனில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 198/8 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 24 (14) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவருடன் களமிறங்கிய இஷான் கிசான் தடுமாறி 8 (10) ரன்களில் நடையை கட்டினார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த தீபக் ஹூடா 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 33 (17) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 39 (19) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அவர்களைப் போலவே மிடில் ஆர்டரில் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் அடித்து 51 (33) ரன்கள் எடுக்க கடைசியில் அக்சர் பட்டேல் 17 (12) ரன்களும் தினேஷ் கார்த்திக் 11 (7) ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவின் பதிலடி:
அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு நல்ல பார்மில் இருக்கும் பட்லர் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டானார். அதைவிட டேவிட் மாலன் 21 (14) லியாம் லிவிங்ஸ்டன் 0 (3) ஜேசன் ராய் 4 (16) என 3 வெறித்தனமான பேட்ஸ்மேன்களை அனலாக பந்துவீசி அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்த ஹர்திக் பாண்டியா ஆரம்பத்திலேயே இந்தியாவின் கையை ஓங்க வைத்தார். அதனால் 33/4 என திணறிய இங்கிலாந்து மொய்ன் அலி – ஹரி ப்ரூக் ஆகியோரின் அதிரடியான 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் காரணமாக மீண்டெழுந்தது.

அப்போது சஹால் விசிய அற்புதமான சுழல் பந்து வீச்சில் சிக்கிய மொயின் அலி 36 (20) ரன்களிலும் ஹரி ப்ரூக் 28 (33) ரன்களிலும் அவுட்டாக்கி சென்றார்கள். இறுதியில் கிரிஸ் ஜோர்டன் 26* (17) ரன்கள் எடுத்து போராடினாலும் சாம் கரண் போன்ற அடுத்து வந்த வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 19.3 ஓவரில் 148 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா வந்ததும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

அர்ஷிதீப் அறிமுகம்:
இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 55 ரன்களும் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இப்போட்டியில் பஞ்சாப்பை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடும் 99-வது வீரராக அறிமுகமானார். அவருக்கு இந்தியாவின் கனவு தொப்பியை கேப்டன் ரோகித் சர்மா பாராட்டி போட்டித் துவங்குவதற்கு முன்பாக தலையில் அணிவித்தார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இவர் கடந்த 2019 முதல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

2019, 2020, 2021 என முதல் 3 சீசன்களில் 10.90, 8.77, 8.27 என்ற எக்கனாமியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்த அவர் 2022 சீசனில் முதல் முறையாக முழுமையான 14 போட்டிகளில் 10 விக்கெட்களை 7.70 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்துவீசி அனைவரின் பாராட்டுகளையும் அள்ளினார். அதுவும் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை பறக்கவிட துடிக்கும் கடைசிகட்ட ஓவர்களில் ரபாடா போன்றவர்களை காட்டிலும் அற்புதமாக பந்துவீசிய அவர் சிறந்த டெத் பவுலராக வலம் வந்ததால் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

அட்டகாசமான தொடக்கம்:
இருப்பினும் அத்தொடரின் 5 போட்டிகளிலும் பெஞ்சில் அமர்ந்திருந்த இவருக்கு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த நிலைமையில் நேற்று கிடைத்த பொன்னான வாய்ப்பில் மொத்தம் 3.3 ஓவரில் 18 ரன்களை கொடுத்து 1 விக்கெட் எடுத்து வெறும் 5.14 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்து வீசினார். அதுவும் தனது முதல் ஓவரையே மெய்டன் ஓவராக வீசிய அவர் தனது டி20 கேரியரை அட்டகாசமாக துவக்கியுள்ளார்.

அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் மெய்டன் ஓவருடன் கேரியரை துவங்கிய 2-வது இந்திய பவுலர் என்ற பெருமையை அஜித் அகர்கருக்கு பின் பெற்றுள்ளார். இதில் வியப்பு என்னவென்றால் கடந்த 2006இல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது வரலாற்றின் முதல் டி20 போட்டியில் களமிறங்கிய போது வீரேந்திர சேவாக் கேப்டனாக இருந்தாலும் எழுத்து வரிசை அடிப்படையில் அஜித் அகர்கர் தான் இந்தியாவின் முதல் டி20 வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : பேசாம வேற நாட்டுக்கு விளையாட போய்டுங்க – முக்கிய வீரருக்கு நடந்த அநீதியால் ரசிகர்கள் சோகம்

அந்த முதல் போட்டியிலேயே அவர் தனது முதல் ஓவரை மெய்டன் ஓவராக வீசி கேரியரை துவக்கினார். அதன்பின் 15 வருடங்களில் அறிமுகமான வேறு எந்த இந்திய பவுலரும் மெய்டன் ஓவராக வீசி தங்களது கேரியரை தொடங்கியதில்லை. அவருக்குப்பின் 99-வது வீரராக அறிமுகமாகியுள்ள அர்ஷிதீப் சிங் அந்த அற்புதமான துவக்கத்தை பெற்றுள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

- Advertisement -