
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 25வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் வகிக்கும் இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இவ்விரு அணிகளுமே தங்களுடைய முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றது.
அதனால் இன்று வெல்லும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் போட்டி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்காவுக்கு முதல் பந்திலேயே ஷாயன் ஜஹாங்கிரை கோல்டன் டக் அவுட்டாக்கிய அர்ஷ்தீப் சிங் கடைசி பந்தில் ஆண்ட்ரீஸ் கௌஸை 2 (5) ரன்களில் அவுட்டாகி தெறிக்க விட்டார்.
அர்ஷ்தீப் சாதனை:
அதனால் 3/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அமெரிக்காவுக்கு மற்றொரு துவக்க வீரர் ஸ்டீபன் டைலர் நிதானமாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக களமிறங்கி நிதானமாக விளையாடிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 11 (22) ரன்கள் எடுத்த போது பாண்டியா வேகத்தில் ஃபெவிலியன் திரும்பினார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய ஸ்டீபன் டைலர் 24 (30) ரன்களில் அக்சர் படேல் சுழலில் போல்ட்டானார்.
அடுத்ததாக மிடில் ஆர்டரில் வந்த நிதீஷ் குமார் கொஞ்சம் அதிரடியாக விளையாடி 27 (23) ரன்கள் குவித்த போது அர்ஷ்தீப் சிங் வேகத்தில் அவுட்டானார். அதே போல எதிர்ப்புறம் அதிரடி காட்ட முயற்சித்த கோரி ஆண்டரசன் 14 (12) ரன்களில் பாண்டிய வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் ஹார்மீத் சிங் 10, ஷேட்லே வேன் 11* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் அமெரிக்கா 110/8 ரன்கள் மட்டுமே எடுத்தது
இந்தியா சார்பில் அதிகபட்சமாகஅர்ஷ்தீப் சிங் 4, சிராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியின் முதல் பந்திலேயே அமெரிக்க வீரர் சயான் ஜஹாங்கிரை இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 0 (1) ரன்களில் அவுட்டாக்கினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற தனித்துவமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்ப.. ஸ்காட்லாந்து போட்டியில் ஆஸி இப்படி விளையாட வாய்ப்பிருக்கு.. ஹேசல்வுட் வெளிப்படை
இதற்கு முன் புவனேஸ்வர் குமார் போன்ற இதர சில இந்திய பவுலர்கள் போட்டியின் இரண்டாவது இன்னிங்சின் முதல் பந்தில் மட்டுமே விக்கெட்டை எடுத்துள்ளனர். இது போக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.