- Advertisement -
ஐ.பி.எல்

நாடே இங்க திண்டாடுது, உங்களுக்கு ஐபிஎல் கேட்குதா? இலங்கை வீரர்களை விளாசும் முன்னாள் வீரர் (என்ன நடந்தது?)

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்த வேளையில் தனது 5-வது போட்டியில் வலுவான பெங்களூருவை எதிர்கொண்டது. நவிமும்பையில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதல் முறையாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கிய சென்னை 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வைத்து தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன் காரணமாக 10-வது இடத்தில் திண்டாடிக் கொண்டிருந்த அந்த அணி 2 பொன்னான புள்ளிகளை பெற்று 9-வது இடத்திற்கு முன்னேறி நிம்மதி பெற்றுள்ளது.

முன்னதாக அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 216/4 ரன்கள் விளாசியது. ஒரு கட்டத்தில் 36/2 என தடுமாறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய இளம் வீரர் சிவம் துபே அனுபவ வீரர் ராபின் உத்தப்பாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடி 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய சென்னையை தூக்கி நிறுத்தினார்.

- Advertisement -

அசத்திய தீக்சனா:
பெங்களூரு பவுலர்களை புரட்டி எடுத்த அந்த ஜோடியில் ஷிவம் துபே 95* ரன்கள் விளாச ராபின் உத்தப்பா 88 ரன்கள் குவித்தார். அதன்பின் 217 என்ற மெகா இலக்கை துரத்திய பெங்களூரு ஆரம்பம் முதலே சீரான விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 20 ஓவர்களில் 193/9 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வி அடைந்தது.

அதிலும் 217 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவின் தொடக்க வீரர் கேப்டன் டு பிளேஸிசை 8 (9) அவுட் செய்து ஆரம்பத்திலேயே போட்டியைத் சென்னை பக்கம் திருப்பிய இலங்கை வீரர் மகேஷ் தீக்சனா அனுஜ் ராவத், சபாஸ் அஹமட், பிரபுதேசாய் என 4 முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து சென்னையின் முதல் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். அதன் காரணமாக ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்ற அவர் அந்த போட்டியின் அறிவிக்கப்படாத ஆட்ட நாயகன் என்றே கூறலாம்.

- Advertisement -

நாடு திரும்புங்க:
இந்நிலையில் சென்னை உட்பட ஒரு சில அணிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் உடனடியாக ஐபிஎல் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்ப வேண்டும் என இலங்கைக்கு முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் ஜாம்பவான் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதன் பிரதமர் ராஜபக்சே மற்றும் அதிபர் போன்றவர்களுக்கு எதிராக அந்த நாட்டில் மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அதில் சனத் ஜெயசூரியா, மேத்தியூஸ் உட்பட பல முன்னாள் இந்நாள் வீரர்களும் பங்கேற்று போராடி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் நாடு தவிக்கும்போது இலங்கை வீரர்களுக்கு ஐபிஎல் கேட்கிறதா என்று அவர் சாடியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருசில கிரிக்கெட் வீரர்கள் ஆடம்பரமாக ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டு தங்களது நாட்டை பற்றி பேச மறுக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக மக்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பேச பயப்படுகிறார்கள். அந்த வகையில் இலங்கை விளையாட்டு துறையின் கீழ் விளையாடி வரும் அந்த கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்துக்கு எதிராக நடந்து கொள்ள மறுக்கின்றனர்”

- Advertisement -

“ஆனால் ஒருசில இளம் கிரிக்கெட் வீரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட வந்துள்ளதை போல அவர்களும் அரசாங்கத்திற்கு எதிராக பேசி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஐபிஎல் தொடரில் எந்தெந்த வீரர்கள் விளையாடுகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். எனவே அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அவர்கள் உடனடியாக தங்களது வேலையை ஒரு வாரத்திற்கு விட்டுவிட்டு போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என கூறினார்.

தற்போதைய ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் மகேஸ் தீக்சனா, பெங்களூரு அணியில் வணிந்து ஹஸரங்கா, பஞ்சாப் அணியில் பனுக்கா ராஜபக்சா, லக்னோ அணியில் துஷ்மந்தா சமீரா, கொல்கத்தா அணியில் சாமிகா கருணாரத்னே ஆகிய 5 வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் ஹஸரங்கா, ராஜபக்சா ஆகியோர் மட்டும் தங்களது சமூக வலை தளங்களின் வாயிலாக மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தனர்.

- Advertisement -

இதர வீரர்கள் அமைதியாக இருக்கும் வேளையில் தற்போது நாடு இருக்கும் நிலையில் உடனடியாக தேவை இல்லாத ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அர்ஜுனா ரணதுங்கா இலங்கை வீரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட ஆல்டைம் இந்திய டெஸ்ட் லெவன் அணி – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

மேலும் மகிளா ஜெயவர்தனே, குமார் சங்ககாரா, லசித் மலிங்கா போன்ற இலங்கை ஜாம்பவான்கள் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தாலும் மக்கள் போராட்டத்திற்கு எதிராக தங்களது சமூக வலைதளங்களில் குரல் கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by