
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக எதிர்வரும் ஜூன் மாதம் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
அதற்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 22-ம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக 10 அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது தங்களது சொந்த மைதானத்திற்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் தற்போது சென்னையில் பயிற்சி எடுத்து வருகின்றனர். சென்னை அணி தங்களது முதலாவது லீக் போட்டியில் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில் இந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக விளையாட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு இறுதியில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ஹார்டிக் பாண்டியா ஒரு போட்டி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டும் இன்றி முன்னணி வீரரான பும்ரா இந்த தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுகிறார். இதன் காரணமாக அவர்களுக்கான மாற்று வீரர்களை களம் இருக்க வேண்டிய சூழல் தற்போது மும்பை அணிக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தான் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான கேப்டன் யார்? இந்திய டெஸ்ட் அணியில் யாருக்கெல்லாம் இடம்? – விவரம் இதோ
ஏனெனில் தற்போதைய மும்பை அணியில் தீபக் சாகர் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகிய இருவரும் முதன்மை வேகப்பந்து பேச்சாளராக விளையாடப் போகும் வேளையில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான இடம் வெற்றிடம் ஆகியுள்ளது. அந்த இடத்தில் தான் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.