
இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை 27 வருடங்கள் கழித்து வெற்றி பெற்றது. தரமான இந்தியாவுக்கு எதிராக கால் நூற்றாண்டுக்கு பின் சந்தித்த அந்த வெற்றி இலங்கை ரசிகர்களிடம் கொண்டாட்டத்தையும் வீரர்களிடம் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் ஒரு காலத்தில் இலங்கையை அணி உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் மிகவும் தைரியமாக விளையாடியதாக முன்னாள் கேப்டன் அரவிந்த் டீ சில்வா தெரிவித்தார். ஆனால் தற்போதைய இலங்கை வீரர்கள் அப்படி விளையாடுவதில்லை என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சாத்தியம் இருக்கு:
அத்துடன் இங்கிலாந்து தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதாக அவர் பாராட்டியுள்ளார். எனவே தங்களைப் போல தைரியத்துடன் விளையாடினால் சமீபத்தில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை அணியால் இங்கிலாந்து மண்ணிலும் வெல்ல முடியும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி டீ சில்வா பேசியது பின்வருமாறு.
“எங்கள் காலத்தில் இருந்த இலங்கை அணி வரலாற்றில் வேறு எந்த அணியும் இப்படி விளையாடியதில்லை என்பது போல் விளையாடியது. எங்களுக்கு ஒரு அடையாளம் இருந்தது. இலங்கைக்கு கிரிக்கெட்டில் வீரர்கள் விளையாடிய விதம் மக்களுக்கு தெரியும். அதை மற்ற அணிகளும் பின்பற்ற விரும்பின. ஆனால் தற்சமயத்தில் அது எங்கள் அணியிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை”
“தற்சமயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட்டை விளையாடும் விதத்தால் நானும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் பேட்டிங் அல்லது பவுலிங் ஆகிய எதுவாக இருந்தாலும் மிகவும் அட்டாக் செய்யும் கிரிக்கெட்டை விளையாடுகின்றனர். இங்கிலாந்து தங்களுடைய அணுகுமுறையை மிகவும் நேர்மறையாக பின்பற்றுகிறது. அது அவர்களுக்கு உதவியும் செய்கிறது”
இதையும் படிங்க: சின்ன வயசுல அவங்கள பாத்து காப்பியடிப்பேன்.. யார்க்கர் போட இதான் காரணம்.. பவுலிங் ஆக்சன் பற்றி பும்ரா பேட்டி
“அதனால் இங்கிலாந்தில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். ஆனால் அது சாத்தியமற்றது கிடையாது” என்று கூறினார். இந்த நிலையில் இங்கிலாந்து மண்ணில் வரலாற்றில் ஒருமுறை (2014) மட்டுமே இலங்கை டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அதனால் 10 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெறும் முனைப்புடன் இலங்கை தற்போது களமிறங்க உள்ளது. ஆனால் இத்தொடரை முன்னிட்டு நடைபெற்ற பயிற்சி போட்டியில் இளம் இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் இலங்கை தோற்றது குறிப்பிடத்தக்கது.