கௌகாத்தியில் நடைபெறும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 549 என்ற பெரிய இலக்கை தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது. அதைத் துரத்தும் இந்திய அணி திண்டாடுவதால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. அதனால் 2000க்குப்பின் 15 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைப்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக அப்போட்டியில் 4வது நாளில் 500 ரன்களை முன்னிலை பெற்ற பின்பும் தென்னாப்பிரிக்கா டிக்ளர் செய்யத் தாமதப்படுத்தியது. அது பற்றி கேட்டதற்கு “இந்தியாவை நாங்கள் க்ரோவல் செய்ய விரும்பியதாக” தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் தெரிவித்தார். அதாவது ஆங்கிலத்தில் க்ரோவல் என்றால் நிறைய இழிவான மோசமான அர்த்தங்கள் இருக்கின்றன.
ஆணவத்தில் ஆடாதீங்க:
குறிப்பாக 1979ஆம் ஆண்டு இங்கிலாந்து கேப்டன் டோனி கிரைக் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து க்ரோவலாக்குவோம் அதாவது அடிமையாக்குவோம் என்று இனவெறியை தூண்டும் வகையில் பேசினார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ரத்தம் கொதிப்பதாக கேப்டன் க்ளைவ் லாய்ட் சொன்னார். அதே வேகத்தில் இங்கிலாந்தை புரட்டி எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 3 – 0 (3) என்ற கணக்கில் வெற்றி பெற்று கிரைக் முகத்தில் கரியைப் பூசியது.
அந்த சூழ்நிலையில் கௌகாத்தி போட்டியில் இந்தியாவை வெற்றியை நெருங்க விடாமல் க்ரோவெல் செய்து முடிந்தால் கடைசி நாளில் தாக்குப் பிடித்துக்கொள்ளுமாறு சவால் விட விரும்பியதாலே தாமதமாக டிக்ளர் செய்ததாக சுக்ரி தெரிவித்தார். அதே சமயம் இனவெறி போன்ற சர்ச்சையான பொருளில் தாம் க்ரோவல் வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். இந்நிலையில் வெற்றி பெற்ற ஆணவத்தில் இந்தியாவை இழிவாக பேசாதீர்கள் என்று அவருக்கு ஜாம்பவான் அனில் கும்ப்ளே பதிலடி கொடுத்துள்ளார்.
கும்ப்ளே பதிலடி:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த வார்த்தையுடன் வரலாறு சேர்ந்திருக்கிறது. 50 வருடத்திற்கு முன் இங்கிலாந்து கேப்டன் அதே பொருளில் வெஸ்ட் இண்டீஸை சொன்ன போது என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். இத்தொடரை தென்னாப்பிரிக்கா வெல்லும் வாய்ப்புள்ளது. நீங்கள் மேலே இருக்கும் போது உங்களுடைய வார்த்தைகள் கவனத்துடன் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: வெற்றியால் இந்தியாவை இழிவாக பேசிய தெ.ஆ கோச்? 1976 டோனி கிரைக் வார்த்தையை வைத்து சொன்னது இதோ
“இது போன்ற வார்த்தைகளை பயிற்சியாளர் இடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் வெல்லும் போது அடக்கமாக பணிவுடன் இருக்க வேண்டுமே தவிர இப்படி சொல்லக்கூடாது” என்று சாடினார். இது பற்றி புஜாரா பேசியது பின்வருமாறு. “இது நம்முடைய இந்திய அணியை நெருப்பாக மாற்றும். அதே சமயம் வலியையும் கொடுக்கும். கடைசி நாள் முழுவதும் நீங்கள் பேட்டிங் செய்வதே இதற்கான பதிலடியாக இருக்கும். அவர்களுக்கான பதிலடியை வார்த்தையால் கொடுக்காமல் பேட்டால் கொடுங்கள்” என்று கூறினார்.



