என்னோட வைஃப் சிரிச்சாங்க, தாடை உடைந்தும் பந்து வீசியது ஏன்? மறக்க முடியாத 2002 பின்னணியை பகிர்ந்த கும்ப்ளே

Anil Kumble
- Advertisement -

நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே வரலாறு கண்டெடுத்த மிகச் சிறந்த இந்திய பவுலராக போற்றப்படுகிறார். கடந்த 1990இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறிய அவர் உயரமாக இருந்ததால் ஸ்பின்னராக சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் காணப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் தன்னுடைய திறமையால் உடைத்து 132 போட்டிகளில் 619 விக்கெட்களை எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த இந்திய பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். மேலும் 1999இல் பாகிஸ்தானுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை சாய்த்து சரித்திர உலக சாதனை படைத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் 271 போட்டிகளில் 337 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Kumble

- Advertisement -

அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த இந்தியராக சாதனை படைத்துள்ள அவர் 2008இல் கேப்டனாகவும் செயல்பட்டு மிகச்சிறந்த மேட்ச் வின்னராக ஓய்வு பெற்றார். அந்த வகையில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றுக்கொடுத்த அவர் கடந்த 2002இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக உடைந்த தாடையுடன் பந்து வீசியதை யாராலும் மறக்க முடியாது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 513/9 ரன்கள் குவித்த இன்னிங்ஸில் 6 (17) ரன்கள் எடுத்த அவர் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் மெர்வி டிலோன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் தாடையில் அடி வாங்கி பெரிய காயத்தை சந்தித்தார்.

கும்ப்ளேவின் அர்ப்பணிப்பு:
அதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்று முதலுதவிகளை எடுத்துக் கொண்ட அவர் அப்போட்டியில் மேற்கொண்டு விளையாட முடியாது என்று மருத்துவர் சொன்னதால் அடுத்த நாள் நாடு திரும்புவதற்காக தயாரானார். இருப்பினும் அந்தப் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக இந்தியாவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பந்து வீச வந்த அவர் வலியுடன் 14 ஓவர்களை வீசி ஜாம்பவான் பிரைன் லாராவை 4 (25) ரன்களில் அவுட்டாக்கியது எப்போதுமே மறக்க முடியாது.

அந்த வகையில் வரலாற்றில் காயத்தை சந்தித்தும் அவர் இந்தியாவுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடியது உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் அந்த போட்டியில் காயத்தை சந்தித்தும் மீண்டும் பந்து வீசப் போகிறேன் என்று சொன்ன போது தாம் விளையாட்டுக்காக சொல்கிறேன் என்று நினைத்து தம்முடைய மனைவி சிரித்ததாக கும்ப்ளே கூறியுள்ளார். அதை விட தமக்கு பதிலாக சச்சின் பந்து வீசி இந்தியாவுக்காக போராடியதை தம்மால் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியவில்லை என்ற காரணத்தாலேயே காயத்தையும் பொருட்படுத்தாமல் பந்து வீச முடிவெடுத்ததாக அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

- Advertisement -

தற்போது இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் மோதி வரும் நிலையில் அந்த மறக்க முடியாத நினைவை பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பகிர்ந்து பேசியது பின்வருமாறு. “அந்த காயத்திற்கு பின்னால் என்னுடைய மனைவி சேத்னாவை அழைத்து நான் நாடு திரும்ப உள்ளேன் என்று சொன்னேன். ஏனெனில் எனக்கு அப்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால் அவர் பெங்களூரு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அந்த நிலையில் மீண்டும் அவரை அழைத்த நான் இந்தியாவுக்காக பந்து வீசப் போகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் நான் விளையாட்டாக பேசுகிறேன் என நினைத்தார்”

Kumble

இதையும் படிங்க:IND vs WI : முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம் – கேப்டன் ரோஹித் சர்மா அறிவிப்பு

“குறிப்பாக நான் என்ன சொல்கிறேன் என்பதன் பின்னணியை தெரிந்து கொள்ளாமல் அவர் ஜோக் செய்கிறேன் என்று நினைத்தார். அதைத்தொடர்ந்து உடைமாற்றும் அறைக்கு நான் சென்ற போது களத்தில் சச்சின் பந்து வீசுவதை கண்டேன். ஏனெனில் அந்த சமயத்தில் அவர் மட்டுமே பந்து வீசக்கூடியவராக இருந்தார். எனவே அது என்னுடைய வாய்ப்பு என்று நினைத்தேன். குறிப்பாக நான் சென்று 3 – 4 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை வீழ்த்தினால் 2 அல்லது 3வது நாள் முடிவில் அவர்களை நம்மால் ஆல் அவுட் செய்ய முடிந்தால் நமக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். அதனால் ஆண்ட்ரூ லெய்பஸ் அவர்களிடம் என்னை பந்து வீச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். குறிப்பாக வீடு திரும்புவதற்கு முன்பாக இந்தியாவின் வெற்றிக்கு என்னால் முடிந்த அளவுக்கு போராட வேண்டுமென்று நினைத்தேன்” என கூறினார்.

Advertisement