ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் துவங்குகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா சொந்த காரணங்களுக்காக விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி விலகினால் ரோஹித்துக்கு பதிலாக யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வி காணப்படுகிறது.
அதே சமயம் துவக்க வீரராக சுப்மன் கில் களமிறங்குவதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் துவக்க வீரராக விளையாடிய அவர் புஜாரா அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட பின் 3வது இடத்தில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஒருவேளை முதல் ஆஸ்திரேலிய போட்டியில் ரோகித் சர்மா விலகினால் கேஎல் ராகுல் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
ரோஹித்துக்கு பதிலாக:
மேலும் ராகுல் ட்ராவிட், புஜாரா போல 3வது இடத்தில் இன்னும் சுப்மன் கில் மெருகேற வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் திறமையானவர் என்பது உங்களுக்கு தெரியும். ஏற்கனவே ஆஸ்திரேலியா காபா மைதானத்தில் அற்புதமான அரை சதமடித்ததால் அவருக்கு அங்குள்ள சூழ்நிலைகள் தெரியும். இருப்பினும் அவருடைய தற்போதைய இடத்தை நான் மாற்ற விரும்புகிறேன்”
“ரோஹித் சர்மா முதல் போட்டியில் விலக வாய்ப்புள்ளதால் அவரை துவக்க வீரராக களமிறக்க ஆர்வங்கள் ஏற்படலாம். ஆனால் ஓப்பனிங் செய்வது அல்லது விக்கெட் கீப்பிங் செய்வது போன்ற விஷயங்களை செய்வதற்காகவே கேஎல் ராகுல் இங்கே இருக்கிறார். ராகுல் டிராவிட் அதை செய்தார். தற்போது கே.எல் ராகுல் அதை செய்து வருகிறார்”
புஜாரா, டிராவிட் மாதிரி:
“கடந்த 25 வருடங்களில் கடினமான 3வது பேட்டிங் இடத்தில் 2 வீரர்கள் மட்டுமே தொடர்ச்சியாக அசத்தியுள்ளனர். அது ராகுல் டிராவிட் மற்றும் புஜாரா. அந்தக் கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் அற்புதமான பங்கை ஆற்றியுள்ளனர். 3வது இடத்தில் நீங்கள் ஒரு போட்டியின் இரண்டாவது பந்தையும் எதிர்கொள்ள நேரிடலாம் அல்லது சூழ்நிலைகள் எளிதாக மாறிய பின்பும் களமிறங்க நேரிடலாம்”
இதையும் படிங்க: இந்த ஒரு அட்ஜஸ்மென்ட் செஞ்சா போதும்.. ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் அசத்துவாரு.. கும்ப்ளே அட்வைஸ்
“ஆனால் பொதுவாக கடினமான முதல் செஷனை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முதல் மணி நேரத்திற்கு பின் குக்கபரா பந்து எதிர்கொள்ள எளிதாக இருக்கும். அதனால் 30 – 60 வரையிலான ஓவர்கள் பேட்டிங் செய்வதற்கு நல்ல நேரமாகும். அதை தங்களுடைய கேரியரில் செய்த அந்த 2 வீரர்கள் 4, 5, 6வது இடங்களில் வரும் பேட்ஸ்மேன்கள் கச்சிதமாக விளையாட உதவினர். எனவே ஆஸ்திரேலியாவில் சுப்மன் கில் அந்த வேலையை செய்ய வேண்டும். அதற்காக சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அவர் கொஞ்சம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.



