
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டி மார்ச் நான்காம் தேதி துபாயில் நடைபெறுகிறது. கடைசியாக 2023 உலகக் கோப்பையில் இந்தியா 10 தொடர்ச்சியான வெற்றிகளுடன் எதிரணிகளை சொல்லி அடித்து ஃபைனலுக்கு சென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
அந்த வகையில் ஐசிசி தொடர்களில் எப்போதுமே வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய ஆஸ்திரேலியா இம்முறையும் இந்தியாவுக்கு சவாலைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் சதத்தை அடித்த டிராவிஸ் ஹெட் இம்முறையும் இந்தியாவை அடித்து நொறுக்க தயாராக இருக்கிறார். எனவே இம்முறை இந்தியா எப்படி வெல்லப் போகிறது என்ற கலக்கம் ரசிகர்களிடம் இருக்கிறது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டி நடைபெற்ற அதே துபாய் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா சந்திக்கிறது. எனவே செமி ஃபைனலிலும் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட 4 ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கினால் வெற்றி பெறலாம் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மேலும் பிளேயிங் லெவனில் மாற்றம் தேவையில்லை என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி கும்ப்ளே பேசியது பின்வருமாறு. “பிட்ச் மாறும் என்று நான் நினைக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக அது எப்படி இருந்ததோ செமி ஃபைனலிலும் அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன். அது போன்ற சூழ்நிலையில் இந்தியா 4 ஸ்பின்னர்களுடன் விளையாட வேண்டும். வருண் சக்கரவர்த்தி கண்டிப்பாக விளையாட வேண்டும்”
“ஷமி கடந்தப் போட்டியில் தோளில் அடி வாங்கினாலும் தொடர்ந்து பௌலிங் செய்தார். எனவே அவர் விளையாடுவதில் பிரச்சனை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அதே பிளேயிங் லெவலுடன் இந்தியா விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். வேறு எந்த வேகப்பந்து வீச்சாளர்களையும் கொண்டு வர பார்க்க வேண்டாம்”
இதையும் படிங்க: டிராவிஸ் ஹெட்டை காலி செய்ய வருண்கிட்ட பந்தை கொடுத்து இப்படி போட சொல்லுங்க.. அஸ்வின் கொடுத்த பிளான்
“நமது 4 ஸ்பின்னர்களுக்கும் துபாயில் இருக்கும் சூழ்நிலைகள் பொருத்தமாக இருக்கும். அவர்கள் நால்வருமே தரமானவர்கள். எனவே நாம் 40 ஓவர்கள் நல்ல சுழல் பந்து வீச்சை பார்க்க முடியும். அது போக உங்களுக்கு 20 ஓவர்கள் வேகப்பந்து வீச்சும் இருக்கிறது. எனவே இந்தியா எதைப் பற்றியும் நினைத்து அதிகமாக கவலைப்பட வேண்டியதில்லை” என்று கூறினார்.