இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேற அவர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர். எனவே அடுத்த இங்கிலாந்து தொடரில் அவர்களை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது.
அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது இந்திய ரசிகர்களை சோகமடைய வைத்தது. இந்நிலையில் இந்தியாவுக்காக 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் திடீரென ஓய்வு பெற்றார். தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
பிசிசிஐக்கு இதே வேலை:
இந்தியாவுக்காக நீண்ட வருடங்கள் விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த அவர்கள் ஃபேர்வெல் போட்டியில் விளையாடி சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விடை பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்றும் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இருப்பினும் அதை செய்யாதது பற்றி பிசிசிஐ விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சொல்லப்போனால் 2012இல் ராகுல் டிராவிட், சேவாக், கம்பீர், லக்ஷ்மன் ஆகியோர் ஓய்வு பெற்றனர்.
2014இல் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற தோனி 2019 உலகக் கோப்பையுடன் மொத்தமாக விடை பெற்றார். 2019இல் மற்றொரு ஜாம்பவான் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார். இவர்கள் அனைவருமே இந்தியாவின் மேட்ச் வின்னர்களாக ஏராளமான வெற்றிகளில் முக்கிய பங்காற்றினர். ஆனால் அவர்களுக்கு பணக்கார பிசிசிஐ ஒரே ஒரு ஃபேர்வெல் போட்டியை நடத்தி வெற்றிகரமாக வழியனுப்பத் தவறி விட்டது.
கும்ப்ளே சாடல்:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு வாரியங்கள் இந்த விஷயத்தில் சிறப்பாக நடந்து கொள்கின்றன. ஆனால் சச்சின் டெண்டுல்கரை தவிர்த்து கங்குலி உட்பட பிசிசிஐ வேறு எந்த இந்திய ஜாம்பவான்களையும் வெற்றிகரமாக வழியனுப்பவில்லை. இது பற்றி அனில் கும்ப்ளே பேசியது பின்வருமாறு. “முதலில் ரோஹித் தற்போது விராட் கோலி. (அஸ்வின் உட்பட) அந்த மூவருமே களத்தில் சரியான முறையில் வழியனுப்பத் தகுதியானவர்கள்”
இதையும் படிங்க: சென்னை மாப்பிள்ளை வேடத்தில் பதிவு.. ரோஹித், கோலி போல ஜடேஜா ஓய்வு பெறுகிறாரா? விவரம் இதோ
“தலைமைப் பொறுப்பில் இருக்கும் முக்கியமானவர்கள் இந்தக் குறையை தீர்க்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். இது ஒரு சமூக வலைத்தளங்கள் ஆளக்கூடிய யுகம் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் ரசிகர்கள் இந்த ஜாம்பவான்களை வெற்றிகரமாக வழியனுப்ப விரும்புகிறார்கள். ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து கர்ஜித்து அவர்களை வழியனுப்புவதே சிறந்த முறையாக இருக்கும்” என்று கூறினார்.



