கேட்ச் விட்டதுக்காக அழும் அளவுக்கு திட்டு வாங்கிய அனில் கும்ப்ளே – யாரிடம் தெரியுமா, ஜாம்பவான் பகிர்ந்த வரலாற்று பின்னணி

Kumble
- Advertisement -

இந்திய கிரிக்கெட் என்றாலே சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் என பேட்ஸ்மேன்களே அதிக வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்த சூப்பர் ஸ்டார்களாக ரசிகர்களால் கொண்டாடப் படுகிறார்கள். இருப்பினும் கர்நாடகத்தைச் சேர்ந்த அனில் கும்ப்ளே அவர்களுக்கு நிகராக போற்றப்படும் அளவுக்கு சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்த மகத்தான ஜாம்பவான் ஆவார். இன்ஜினியரிங் படித்தாலும் கிரிக்கெட் மீதான காதலால் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு 1990இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர் சுழல் பந்து வீச்சில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை திணறடித்து ஏராளமான விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.

18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மை சுழல்பந்து வீச்சாளராக ஜொலித்த அவர் ஓய்வு பெறும்போது கேப்டனாகும் அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியையும் மதிப்பையும் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 337 விக்கெட்டுகளையும் எடுத்து அந்த 2 வகையான கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்துள்ள அவர் 956 விக்கெட்டுக்களுடன் உலக அளவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3வது பவுலராகவும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

- Advertisement -

ஆரம்பகால தடுமாற்றம்:
அதிலும் 1999இல் டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் கிரிக்கெட்டில் இந்தியா கண்ட மிகச்சிறந்த பவுலராக இப்போதும் ஜொலிக்கிறார். சொல்லப்போனால் ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஆஃப் ஸ்பின்னர்கள் என்ற நிலைமையில் அவரைப் போன்ற ஒரு லெக் ஸ்பின்னரை இந்தியா இதற்கு முன் கண்டதில்லை இப்போதும் காண முடியவில்லை. இருப்பினும் அப்படிப்பட்ட மகத்தான அவர் ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறினார்.

குறிப்பாக தோற்றத்தில் உயரமான அவர் பந்தை பெரிய அளவில் சுழற்ற மாட்டார் என்ற நோக்கத்தில் அவரை இந்தியாவுக்கு தேர்வு செய்யும் போதே நிறைய எதிர்ப்புகள் எழுந்தன. அதற்கேற்றார்போல் அறிமுகமான முதல் 2 வருடங்களில் சுமாராக பந்து வீசியதால் 1992இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அவரை தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை. அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த கும்ப்ளே அதற்காக மனம் தளராமல் துல்லியத்துடன் வேகத்தில் பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத வகையில் வேகத்தில் வேரியேஷனை காட்டி வெற்றிகரமாக பந்து வீச துவங்கி விக்கெட்டுகளை அள்ளினார்.

- Advertisement -

திட்டிய கபில்:
அப்போது முதல் சூப்பர் ஸ்டாராக அவதரித்து இந்தியாவின் சாம்பியன் வீரராக உருவெடுத்த அவர் தனது அறிமுக போட்டியிலேயே கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு கபில் தேவ் திட்டியதாக முன்னாள் இந்திய வீரர் பிஷன் சிங் பேடி வரலாற்று பின்னணியை பகிர்ந்துள்ளார். கடந்த 1990இல் ஓல்டு ட்ராபோர்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அனில் கும்ப்ளே ஆலன் லம்ப் கொடுத்த எளிதான கேட்ச்சை கோட்டை விட்டார். பொதுவாகவே அறிமுகப் போட்டியில் அனைத்து வீரர்களும் தடுமாறுவார்கள் என்ற அடிப்படையில் அந்த தவறை செய்ததற்காக கபில் தேவ் கடுமையாக திட்டியதாக பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

அந்த கேட்சை அவர் பிடித்திருந்தால் அந்த சமயத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக சாதனை படைத்திருந்த ரிச்சர்ட் ஹேட்லியின் உலக சாதனையை உடைத்திருக்க முடியும் என்பதே அவரின் கோபத்திற்கு காரணமாகும். அப்படி அறிமுக போட்டியிலேயே கண்ணீர் விடும் அளவுக்கு கஷ்டத்தை எதிர்கொண்ட காரணத்தாலேயே நாளடைவில் அனில் கும்ப்ளே ஜாம்பவானாக உருவெடுத்ததாகவும் பிஷன் சிங் பேடி பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அது அவரின் அறிமுக டெஸ்ட் போட்டியாகும். ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடந்த அப்போட்டியின் போது நான் இந்திய அணியின் மேனேஜராக செயல்பட்டேன். அப்போது ஒரு கேட்சை விட்டதற்காக கும்ப்ளேவை களத்திலேயே கபில் தேவ் கடுமையாக திட்டினார். அப்போட்டி அவருக்கு அறிமுகம் என்றாலும் கபில் தேவ் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி சீனியராக இருந்தார். ஆனால் அன்றைய நாளின் முடிவில் உடைமாற்றும் அறைக்கு நான் செல்லும் போது அனில் கும்ப்ளே அங்கு அழுது கொண்டிருப்பதை பார்த்தேன். என்னைக் கேட்டால் அந்தத் தருணம்தான் அவரை மேலும் மனதளவில் வலுவானவராக மாற்றியது. அந்தத் தருணத்தில் அவர் கண்ணீர் விட்டது மிகவும் முக்கியமானதாகும். அந்த தருணத்தில் தாம் சுமாராக செயல்படுகிறோம் என்று நினைத்ததாலேயே நாளடைவில் அவர் இந்தளவுக்கு வளர்ந்துள்ளார்” எனக்கூறினார்.

Advertisement