
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது இம்மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றிய வீரர்களின் பட்டியலையும், தக்க வைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அப்படி வெளியான பட்டியலில் பல்வேறு சுவாரஸ்யமான மாற்றங்கள் அனைத்து அணிகளிலுமே நிகழ்ந்துள்ளன.
அந்த வகையில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்களது அணியில் கடந்த பல ஆண்டுகளாகவே விளையாடி வந்த நட்சத்திர ஆல்ரவுண்டரான ஆண்ட்ரே ரசலை விடுவித்தது. அப்படி கொல்கத்தா அணி அவரை கழட்டிவிட்டதும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார்.
இப்படி திடீரென அவர் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க என்ன காரணம்? என்பது குறித்து தெளிவான விளக்கத்தை ஆண்ட்ரே ரசல் வழங்கியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : ஐ.பி.எல் போன்ற பெரிய தொடர்களில் ஆல்ரவுண்டராக இருப்பது மிகவும் சவாலான ஒரு விடயம். இங்கு நான் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் தயாராக இருக்க வேண்டியது அவசியம். இந்த வயதில் என்னால் இந்த மூன்று விடயத்தையும் சமாளிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
ஐபிஎல் போன்ற ஒரு பெரிய தொடரில் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட நான் யோசித்தது கிடையாது. என்னுடைய பேட்டிங் பவுலிங்கையும், பௌலிங் பேட்டிங்கையும் நிறைவு செய்கிறது. ஒரு போட்டியின் போது நான் நன்றாக பந்து வீசினால் அது பேட்டிங்கிலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் முதல் வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய மார்னஸ் லாபுஷேன் – விவரம் இதோ
அதேபோன்று பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால் பந்து வீச்சிலும் அது வெளிப்படும் என்று நினைக்கிறேன். நான் முழுநேர ஆல்ரவுண்டராக ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்பதை கருதியே இங்கிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தேன் என ஆண்ட்ரே ரசல் கூறியது குறிப்பிடத்தக்கது.