இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். அதனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற முடிவெடுத்துள்ளனர். ஆனால் அதற்கு முன் வயதைக் காரணமாக வைத்து அவர்களை கழற்றி விட அஜித் அகர்கர், கெளதம் கம்பீர் முயற்சித்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாகவே 2025 சாம்பியன்ஸ் டிராபியை கேப்டனாக வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. இருப்பினும் அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தொடர்நாயகன் விருது வென்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். அதே போல விராட் கோலியும் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்தார்.
2027 உலகக் கோப்பை வெல்ல:
அத்துடன் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அவர்கள் முதல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது.
அதற்கு முக்கிய காரணமான விராட், ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு தேவை என்று முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவதை நான் விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாம் ஏன் தோற்றோம்?”
விராட், ரோஹித் வேணும்:
“ஏனெனில் நம்மிடம் போதுமான அனுபவம் இல்லை. ஆனால் அடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரில் விராட், ரோஹித் விளையாடிய விதம் இந்திய அணியின் மேலிருந்த அழுத்தத்தை நீக்கினார்கள். அந்த வகையில் சீனியர் வீரர்கள் அழுத்தத்தைப் போக்கும் தன்மையுடையவர்கள். அதனால் அவர்கள் பெரிய போட்டிகளில் உங்களுக்குத் தேவை. எனவே அவர்கள் சிறப்பாக விளையாடினால் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: ஆஸியில் இந்தியா செஞ்ச சாதனை சம்பவம்.. எவ்ளோ கஷ்டம்ன்னு இங்கிலாந்திடம் கேளுங்க.. ரோஹித் பெருமிதம்
“அது அணிக்கும் நிர்வாகத்திற்கும் உதவும் என்பதுடன் எதிரணி மீது அழுத்தத்தை உண்டாக்கும். அவர்களும் தங்களுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள கடினமாக உழைக்க வேண்டும். சீனியர் வீரர்கள் இருப்பதால் கண்டிப்பாக அணிக்கு பெரிய சாதகம் இருக்கும். அதே சமயம் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை போல அவர்கள் தொடர்ந்து விளையாடுவதை நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.



