ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் நட்சத்திர இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக விளையாடிய அவர்கள் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
அந்தளவுக்கு பேட்டிங்கில் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர்கள் தற்போது 35 வயதை கடந்து விட்டனர். எனவே வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாய்ப்பு குறைவு:
குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவேன் என்று தெரிவித்த ரோகித் சர்மா இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என சமீபத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இன்னும் ஓரிரு வருடங்கள் விளையாடினாலும் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாக முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2027 வரை அவர்களே விளையாடிக் கொண்டிருந்தால் இளம் வீரர்கள் எப்போது இந்திய அணிக்குள் வந்து அனுபவத்தை பெறுவது? என்றும் அமித் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் செய்தியாளரின் கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு. “அடுத்த 2 – 3 வருடங்களில் நடைபெறும் உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவது கடினமாகவே தெரிகிறது”
“ரோகித் சர்மாவிடம் கிரிக்கெட்டில் விளையாட இன்னும் 3 – 4 வருடங்கள் இருக்கிறது. ஆனால் இந்தியாவுக்காக அவர் விளையாடுவதற்கு அதிக வருடங்கள் இல்லை. அவர் விரைவாகவே ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவதை பார்க்க முடியும். விராட் கோலியும் அதே நிலையில் தான் இருக்கிறார். சொல்லப்போனால் இது இப்படி தான் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: மிஸ்ஸான ஆர்சிபி 49 ரெக்கார்ட்.. 12க்கு 10 தோல்வி.. அமெரிக்காவில் திணறும் மும்பை.. மிரட்டிய ஃபிரீடம் அணி
“இல்லையென்றால் எப்படி இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் வருவார்கள்? ஏனெனில் ஒருவருக்கு 37 வயதாகிறது. மற்றொருவர் விரைவில் 36 தொடுகிறார். அடுத்த 2 வருடங்களில் அவர்கள் 38 – 39 வயதை தாண்டி விடுவார்கள். பொதுவாக 40 வயது வரை மட்டுமே நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும். அப்படித்தான் நீண்ட கால கிரிக்கெட்டர்கள் விளையாடுவார்கள்” என்று கூறினார்.



