
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் தலைமையில் மீண்டும் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் திணறலாக பேட்டிங் செய்த லக்னோ 165 ரன்கள் எடுத்தது. ஆனால் அதே ரன்களை அதே மைதானத்தில் டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா ஆகியோரின் அதிரடியால் ஹைதெராபாத் 10 ஓவருக்குள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
அந்த தோல்விக்கு பேட்டிங்கில் மெதுவாக விளையாடிய கேப்டன் கேஎல் ராகுல் முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா பொதுவெளியில் கேஎல் ராகுலை திட்டுவது போல் கோபமாக பேசினார். அதனால் சம்பளம் கொடுக்கும் உரிமையாளர் என்றாலும் அதற்காக பொதுவெளியில் இப்படி கேப்டனை திட்டலாமா? என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேப்டனை மாத்தணும்:
அடுத்த சில நாட்களில் கேஎல் ராகுலுக்கு விருந்தளித்த சஞ்சீவ் கோனேகா அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் அன்றைய நாளில் சாதாரணமாக நடந்த விஷயத்தை அனைவரும் பேசி பெரிதாகி விட்டதாக லக்னோ அணியில் விளையாடிய முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அத்துடன் லக்னோ அணியின் வெற்றிக்கு கேஎல் ராகுல் இதுவரை பெரியளவில் பங்காற்றவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே சமீப காலங்களில் மெதுவாக பேட்டிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ள கே.எல் ராகுலை கழற்றி விட்டு லக்னோ நிர்வாகம் ஏதேனும் வெளிநாட்டு வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அமித் மிஸ்ரா பேசியது பின்வருமாறு. “லக்னோ கேப்டன் இந்தியரா இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான சரியான அணுகு முறையை கொண்டவர் தான் கேப்டனாக இருக்க வேண்டும்”
“குறிப்பாக அணிக்காக விளையாடுபவர் கேப்டனாக இருக்க வேண்டும். அந்த வகையில் லக்னோ அணி இன்னும் சிறந்த கேப்டனை பார்க்கும் என்று நான் நம்புகிறேன். கோனேகா ஏமாற்றத்தை சந்தித்தார். ஏனெனில் கொல்கத்தாவுக்கு எதிராக 90 – 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நாங்கள் ஹைதராபாத்துக்கு எதிராக 10 ஓவருக்குள் தோற்றோம்”
இதையும் படிங்க: தார் ரோட் பிட்ச்களை ஒழிக்க யாரும் செய்யாத மாஸ் திட்டம்.. வெளிநாட்டு சரக்கை களமிறங்கிய பாகிஸ்தான்
“அதற்காக நானே கோபப்பட்ட போது பணத்தை முதலீடு செய்த ஒருவர் கோபப்பட மாட்டாரா? எனவே அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அதை பெரிதாக்கி விட்டனர்” என்று கூறினார். அப்படி சமீப காலங்களில் மெதுவாக விளையாடுவதாலேயே 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல் கழற்றி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.