
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா 9வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அத்தொடருக்கு முன் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர். அதனால் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இருப்பினும் இந்திய அரசின் ஆதரவுடன் விளையாடிய சூரியகுமார் தலைமையிலான அணி 3 முறை பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்றது. ஆனால் 26 இந்தியர்கள் இயற்கை எய்தியதற்கு பதிலடியாக லீக் சுற்று போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணியினர் கைகுலுக்கவில்லை. அதனால் இந்தியா ஜென்டில்மேனாக நடந்து கொள்ளவில்லை என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சித்தனர்.
அதே போல இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி கைகளால் இந்தியா கோப்பையை வாங்க மறுத்தது. அதனால் தங்களுடன் கை கொடுக்காமல் தங்களுடைய தலைவர் கையில் கோப்பையை வாங்காத இந்திய அணி கிரிக்கெட்டுக்கு அவமரியாதை செய்ததாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா விமர்சித்தார். இந்நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா நண்பனாக இருக்க விரும்பவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட நிலைமையில் எதிர்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுடன் விளையாடியதே இந்தியா செய்த பெரிய மரியாதை என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆசிய கோப்பையில் விளையாடிய வெற்றி கண்டு பாகிஸ்தானுடன் கைகுலுக்காத இந்திய அணியின் செயலுக்கு தலைவணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி மிஸ்ரா பேசியது பின்வருமாறு.
“நாம் கைகுலுக்க வேண்டும் என்ற விதிமுறை எதுவும் இருக்கிறதா? நாங்கள் கிரிக்கெட்டை விளையாடுகிறோம். உங்களுடன் நாங்கள் நண்பர்களாக இருக்க விரும்பவில்லை, கை குலுக்கவும் விரும்பவில்லை அது எங்களுடைய விருப்பம். நாங்கள் கைகுலுக்க வேண்டும் என்று ஏதேனும் விதிமுறை புத்தகத்தில் இருக்கிறதா? நாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் உங்களை தோற்கடித்துள்ளோம். அதைத் தாண்டி உங்களுக்கு என்ன வேண்டும்?”
இதையும் படிங்க: சூரியகுமார் ஃபின்கோட் மாதிரி ஆகிட்டாரு.. கில் டி20க்கு பத்தல.. இந்த டீம் 2026 டி20 உ.கோ போதாது.. ஸ்ரீகாந்த் விமர்சனம்
“உங்களுடன் நாங்கள் நண்பர்களாக இருக்க வேண்டுமா? நாங்கள் எதற்காக இருக்க வேண்டும்? அது எங்களுடைய விருப்பம். நாங்கள் அதை செய்ய மாட்டோம். நமது மொத்த இந்திய அணிக்கும் நான் சல்யூட் செய்கிறேன். இந்திய அணி தாங்கள் சொன்ன வார்த்தைகளில் நின்றனர். ஒருவேளை நாங்கள் விரும்பியிருந்தால் பாகிஸ்தானுடன் விளையாடியிருக்கவே மாட்டோம். அதற்காக அபராதம் போட்டால் நாங்கள் கட்டுவோம். ஆனால் உங்களை மதித்த நாங்கள் உங்களுடன் கிரிக்கெட்டை விளையாடினோம். நீங்கள் அதற்கே தகுதியற்றவர்கள்” என்று கூறினார்.