இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அமித் மிஸ்ரா அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2003 – 2017 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் 156 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக 2008ஆம் ஆண்டு தனது அறிமுகப் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
முன்னதாக 2003ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான மிஸ்ராவுக்கு 2008 வரை தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில் அந்தக் காலகட்டங்களில் ஜாம்பவான் அனில் கும்ப்ளே இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக விளையாடினார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான தமக்கு ஆரம்பக் காலங்களில் தொடர்ச்சியாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மிஸ்ரா கூறியுள்ளார்.
2008 ஐபிஎல் சம்பவம் இல்லனா:
அந்த சூழ்நிலையில் 2008 ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்ததாலேயே இந்திய அணியில் மறு வாய்ப்பு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். இல்லையேல் தம்முடைய கேரியர் அப்போதே முடிருந்திருக்கலாம் என்று தெரிவிக்கும் மிஸ்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் அணியில் இருக்கும் நீங்கள் சில நேரங்களில் வெளியே இருப்பது ஏமாற்றத்தைக் கொடுக்கும். சில நேரங்களில் நீங்கள் பிளேயிங் லெவனில் வாய்ப்பை பெறுவீர்கள். சில நேரங்களில் பெற மாட்டீர்கள்”
“அது போன்ற நேரங்களில் பெரும்பாலும் நீங்கள் விரக்தியடைவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் வாய்ப்பு கிடைக்கும் போது உங்களை நிரூபித்தாக வேண்டும். 2008 ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் எடுத்தது என்னுடைய கேரியரை தீர்மானிக்கும் தருணமாக அமைந்தது என்று சொல்வேன். அந்தப் போட்டியில் நான் 5 விக்கெட்டுகள் எடுத்தேன். அதனாலேயே இந்திய அணியில் கம்பேக் கொடுத்தேன்”
கேரியரை கொடுத்த ஹாட்ரிக்:
“அதற்கு முன் தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய நான் ஒவ்வொரு சீசனிலும் 35 – 45 விக்கெட்டுகள் எடுத்தும் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் காலையில் அனில் பாய் காயமடைந்ததாக என்னிடம் சொன்னார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய நான் 5 விக்கெட்டுகள் எடுத்தது மிகப்பெரிய தருணமாக அமைந்தது”
இதையும் படிங்க: 10/2 டூ 363/6.. 184 ரன்ஸ்.. துலீப் கோப்பை செமி ஃபைனலில் ருதுராஜ் அபாரம்.. தேர்வுக் குழுவுக்கு சிக்னல்
“அனில் கும்ப்ளே இடத்தை நிரப்புவது மிகப் பெரியதாகும். அதனால் மிகப்பெரிய அழுத்தம் இருந்த அப்போட்டியில் நான் ஆட்டநாயகன் விருதை வென்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார். அது போக மேற்கொண்டு 2 முறை மிஸ்ரா ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் ஐபிஎல் தொடரில் 3 முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே பவுலராக இன்றும் அவர் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



