
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்று இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்துள்ளது. மேலும் நேற்று அவர்கள் பெற்ற இந்த வெற்றியோடு புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கும் கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கே.கே.ஆர் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது. பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடும்போது ஒரு கட்டத்தில் அக்சர் பட்டேல் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.
அந்த நேரத்தில் கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் அக்சர் படேல், ஸ்டப்ஸ் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் என மூன்று முக்கிய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை தனிநபராக கொல்கத்தா அணியின் பக்கம் திருப்பினார். நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சுனில் நரேன் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோன்று பேட்டிங்கிலும் 27 ரன்கள் அடித்து கை கொடுத்திருந்தார்.
அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. குறிப்பாக நேற்றைய போட்டியில் மிடில் ஓவர்களின் போது அவரது சிறப்பான பந்துவீச்சே அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதனால் மீண்டும் சுனில் நரேன் நல்ல பவுலிங் பார்மிற்கு திரும்பியுள்ளார் என்று அனைவரும் பேச துவங்கியுள்ளனர். இந்நிலையில் சுனில் நரேன் பந்துவீச்சு குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நடத்திய பிரத்யேக மீட்டிங் குறித்து சில சுவாரசியமான தகவல்களை முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சில வருடங்களுக்கு முன்பு சுனில் நரேன் உச்சகட்ட பந்துவீச்சு பார்மில் இருந்தார். அப்போது சுனில் நரேனின் பந்துவீச்சை எப்படி சமாளிப்பது என மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கென்று தனிப்பட்ட மீட்டிங் ஒன்றினை நடத்தி இருந்தது. ஆனால் அந்த மீட்டிங்கிலும் அவரது பந்துவீச்சை நம்மால் எதுவும் செய்ய முடியாது. நாம் அவரை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டு நகர்ந்து விட்டோம்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் அவரை ஏன் வச்சிருக்காங்கனு எனக்கு சுத்தமா புரியல – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
எந்த மும்பை பேட்ஸ்மேனுக்கும் அவரை எப்படி அட்டாக் செய்வது என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு அவர் ஒரு டேஞ்சரான பவுலர். மிடில் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வெகு சில பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர். அவரிடம் அந்த சக்தி இருப்பதனால் தான் அவரை கொல்கத்தா அணி தொடர்ச்சியாக தக்க வைத்து வருகிறது என அம்பத்தி ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.