கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய ரசிகர்கள் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி எப்போது நடைபெறும் என்று ஆவலுடன் காத்திருந்தபோது 2021 பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
தற்போது இதற்கு முன்னர் சையது முஷ்டாக் அலி டி20 தொடர் வருகின்ற ஜனவரி 10 முதல் 31 வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடர் 2021 ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெறுவது, இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த டி20 தொடருக்காக ஒவ்வொரு மாநில அணிகளும் தங்களது வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் குறித்த தகவலை விரைவில் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்தது.
இந்த தொடரில் பங்குபெறும் அணிகள் தங்கள் அணியில் இடம்பெற வாய்ப்புள்ள வீரர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் விளையாட போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளன. உத்திர பிரதேஷ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னாவும், கேரளா அணிக்காக ஸ்ரீசாந்த் மற்றும் பஞ்சாப் அணி சார்பாக யுவராஜ் சிங்கும் விளையாடுவதாக தகவல் வெளியாகியது.
தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடுவும் இந்த தொடரில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தி ராயுடு ஆந்திரப்பிரதேச அணிக்காக விளையாட இருக்கிறார். இவ்வாறு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்வது தொடரின் மீது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்களும் இவர்களது வருகையால் மீண்டும் அவர்களின் ஆட்டத்தை காணும் மகிழ்ச்சியில் உள்ளனர். இவர்களைப் போலவே இந்த தொடரில் எம் எஸ் தோனியும் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் தோனிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சையத் முஷ்டாக் அலி தொடரானது ஜனவரி 10 ஆம் தேதி துவங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அளவிற்க்கு தற்போது உலகெங்கும் உள்ளூர் போட்டிகளும் சிறப்பாக சுவாரசியமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.