
ஐசிசி 2025 மகளிர் கிரிக்கெட் கோப்பையை ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் லீக் சுற்றில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்காவிடம் இந்தியா அடுத்தடுத்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டியில் வென்ற இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது.
அங்கே ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன்களை திருப்பி அடித்த இந்தியா ஐசிசி உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 300+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக உலக சாதனை படைத்தது. அதனால் 7 முறை உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து வெளியேற்றிய இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. கடைசியாக இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
அதனால் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று இந்தியா புதிய சரித்திரம் படைத்தது. அத்துடன் 3 தோல்விகளை சந்தித்த பின்பும் மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. இந்நிலையில் தங்களை தோற்கடித்து வெளியேற்றிய இந்தியா இறுதிப் போட்டியில் உலகக் கோப்பை வென்றதை பார்க்கவில்லை என்று ஆஸ்திரேலியா கேப்டன் அலிசா ஹீலி தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது உலக மகளிர் கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். ஏனென்றால் இந்த வெற்றியால் மகளிர் கிரிக்கெட்டில் மற்றுமொரு தரமான போட்டியாளர் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஹீலி பேசியது பின்வருமாறு. “தற்போது அந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ள நான் நன்றாக உணர்கிறேன்”
“நான் பொய் சொல்லவில்லை. 7 வாரங்கள் கொண்ட அந்த மிகப்பெரிய சுற்றுப்பயணத்தில் நாங்கள் மிகவும் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினோம். ஆனால் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் மட்டும் எங்களால் வெற்றிக் கோட்டை தாண்ட முடியவில்லை. அது ஏமாற்றத்தைக் கொடுத்தது. இருப்பினும் இந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த வட்டத்தில் எப்படி விளையாடப் போகிறது? என்பதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்”
இதையும் படிங்க: 2026 டி20 உலகக் கோப்பையில் அந்த 2 பேரை தாண்டாம.. இந்தியாவை தோற்கடிக்க முடியாது.. அஸ்வின் பேட்டி
“அற்புதமான கிரிக்கெட்டை விளையாடும் எங்களை வெளியேற்ற வேண்டும் என்று எதிரணிகள் சிந்திப்பது நல்லது. நான் இறுதிப்போட்டியை பார்க்கவில்லை. ஆனால் இந்தியா வெற்றிக்கொட்டை தாண்டியது சிறப்பானது. அது உலக கிரிக்கெட்டுக்கு சிறந்த விஷயமாகும். முன்னோக்கு பார்வையில் அது சிறந்த அனுபவமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் தோற்றது இன்னும் எனக்கு ஏமாற்றத்தையும் வலியையும் கொடுக்கிறது. ஆனால் அது பரவாயில்லை” என்று கூறினார்.