இவரது ஆமைவேக ஆட்டம் தான் இந்திய அணியின் மோசமான நிலைக்கு காரணம் – ஆலன் பார்டர் விளாசல்

Border
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருப்பதால் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் இரண்டாவது போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

gill 2

- Advertisement -

அதனை தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் அதேபோன்று சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை விட 94 ரன்கள் பின்தங்கி சற்று தடுமாற்றத்தை அளித்துள்ளது. இந்த தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக இந்திய சீனியர் வீரர் ஒருவரை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆலன் பார்டர் குறிப்பிட்டு கடுமையாக பேசியுள்ளார்.

இந்திய அணியின் நிதான ஆட்டக்காரர் என்றாலே நம் நினைவுக்கு வருவது புஜாரா தான். இதுவரை 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் அவர் பொறுமையாக விளையாடுவது நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் விளையாடி வரும் இவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 113 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

pujara

இந்நிலையில் இவரது ஆட்டத்தை விமர்சித்துள்ள ஆலன் பார்டர் அவர் குறித்து கூறியதாவது : புஜாரா ஆட்டத்தைப் பார்த்தால் ரன் குவிப்புக்கு பதிலாக களத்தில் நீண்ட நேரம் நிற்க விரும்புவதாக தெரிகிறது. அவர் பெரிய ஷாட் ஆடவே பயப்படுகிறார். அவரது ஆட்டத்தில் தாக்கமே இல்லை, ரன்கள் அடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரிலும் அவரது ஆட்டத்தின் பாதிப்பு எதிரொலிக்கிறது.

pujara 1

ரன்களை அடிக்காமல் தொடர்ந்து களத்தில் நின்று அழுத்தத்தைக் கொடுப்பதால் அடுத்து வரும் வீரர்கள் ரன் அடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அடித்து விளையாடி ஆட்டமிழக்கின்றனர் என்று கடுமையாக சாடி உள்ளார். சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்சில் கூட புஜாரா 176 பந்துகளை சந்தித்து 50 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement