இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மிகப்பெரிய மரபு இருக்கிறது. அதாவது அனைத்து விதமான போட்டிகளுக்கும் ஒருவரையே கேப்டனாக நியமிப்பார்கள். அப்போது தான் அனைத்து வீரர்களும் அந்த ஒரு கேப்டன் தலைமையில் வழி நடப்பார்கள் என்று அவர்களது எண்ணம். ஆனால் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை பார்த்துக் கொண்டால் ஒவ்வொரு வடிவிலான போட்டிக்கும் தனித்தனியான வீரர்கள் கேப்டனாக இருப்பார்கள். ஆனால் இந்திய அணியில் மட்டும் எப்போதும் அனைத்து வகையான பார்மெட்டிற்க்கும் ஒரே கேப்டன் தான் இருந்து வருகின்றனர்.
தற்போது இதனை இந்தியாவில் அமல்படுத்த வேண்டும் என்று பலரும் பேசி வருகின்றனர். கபில்தேவ் இது வேலைக்கு ஆகாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் இந்தியாவின் கேப்டன்ஷிப் தனித்தனியாக இருக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்.. விராட் கோலி இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கோலி விளையாடத் தொடங்கிய நான்கு வருட காலத்திலேயே கேப்டன் பதவி வந்து விட்டதால் அவர் மீது அதிக பாரம் இருப்பதாக நான் உணர்கிறேன். அந்த வேலை பளுவைக் குறைப்பதற்காக குறைந்தபட்சம் டி20 போட்டிகளில் ஆவது அவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.
அவருக்குப் பதில் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம். இது விராட் கோலிக்கு உதவியாக இருக்கும். ஐபிஎல் தொடரின் மூலம் ரோகித் சர்மா தன்னை ஒரு மிகச்சிறந்த கேப்டனாக நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் கோப்பையை வென்று அசத்திக் கொண்டிருக்கிறார்.
இனிவரும் டி20 தொடர்களில் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் தன்னை அவர் நிரூபிப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமையும் என்று தெரிவித்திருக்கிறார் சோயப் அக்தர்.