சோயிப் அக்தருக்கு இந்திய வீரர்களை பற்றி ஏதாவது ஒன்று பேசி கவனத்தை அவரது பக்கம் திருப்புவது சமீபகால வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்திய கேப்டன் விராட் கோலியை பற்றி பேசியுள்ளார். மேலும் இருவரும் பஞ்சாபிகள் அதனால் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என்றும் கூறியுள்ளார்.

எஸ்பிஎன்கிரிக் இன்போ இணையதளத்திற்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியதாவது : நானும் விராட் கோலியின் சிறந்த நண்பர்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் நானும் அவரும் பஞ்சாபிகள். அதே நேரத்தில் இருவரும் பரம எதிரிகளாக இருந்திருப்போம். அவரை சீண்டுவதில் மும்முரம் காட்டி இருப்பேன்.
எனது பந்துகளை உங்களால் அடிக்க முடியாது, நீங்கள் நினைத்ததெல்லாம் இங்கு நடக்காது என்று சொல்லியிருப்பேன். பந்து கிரீஸிலிருந்து அவரை விட்டு விலகிச் செல்லுமாறு வேகமாக வீசி அவருக்கு பிடித்தமான அந்த டிரைவ் ஷாட் ஆட வைத்து அவரை வீழ்த்தி இருப்பேன் .
அதே நேரத்தில் விராட் கோலியிடம் மிகப்பெரிய நல்ல விஷயம் இருக்கிறது.

அவரை சீண்டும் போதெல்லாம் அவரது கவனம் அதிகரிக்கும். எப்படி இருந்தாலும் நான் அவருக்கு எதிராக ஆடி இருந்தாலும் இப்போது அடித்திருக்கும் ரன்களை அப்போதும் அடித்திருப்பார்.அவர் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான் ஆகிய ஜாம்பவான்களுக்கு எதிராக விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் இவ்வாறு கூறியுள்ளார் சோயிப் அக்தர்.

பாகிஸ்தானுக்காக 163 ஒருநாள் போட்டிகள் மற்றும் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அக்தர் 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து தனது யூடியூப் சேனல் மூலம் தொடர்ந்து கிரிக்கெட் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.



