எப்பா என்னா அடி, முரட்டு சிக்ஸரால் எதிர்புறம் உறைந்து போன வெ.இ வீரர் – எத்தனை மீட்டர்னு பாருங்க, வீடியோ உள்ளே

WI Six Powell Akel Hosein
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்றில் விளையாடும் கடைசி 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் தன்னுடைய முதல் போட்டியில் ஸ்காட்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதனால் அக்டோபர் 19ஆம் தேதியன்று நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 153/7 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு கெய்ல் மேயர்ஸ் 13 (12) எவின் லெவிஸ் 15 (18) கேப்டன் நிக்கோலஸ் பூரன் 7 (9) சமர் ப்ரூக்ஸ் 0 (3) ஜேசன் ஹோல்டர் 4 (3) என முக்கிய நட்சத்திர சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 45 (36) ரன்கள் எடுத்தார். அவருடன் கடைசி நேரத்தில் ரோவ்மன் போவல் 28 (21) ரன்களும் அகில் ஹொசைன் 23* (12) ரன்களும் குவித்து ஓரளவு காப்பாற்றிய நிலையில் ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக சிகந்தர் ராசா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

மீண்டெழுந்த விண்டீஸ்:
அதை தொடர்ந்து 154 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே அணியினர் ஆரம்பம் முதலே அனலாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக சீன் வில்லியம்ஸ் 1 (2) கேப்டன் சகப்வா 13 (9) சிகந்தர் ராசா 14 (8) என நம்பிக்கை நட்சத்திரங்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோங்வே 29 (22) ரன்களும் தொடக்க வீரர் மாதவேரே 27 (19) ரன்களும் எடுத்தனர். இருப்பினும் 18.2 ஓவரில் 122 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த வெற்றிக்கு 16 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய் அ பங்காற்றிய அல்சாரி ஜோசப் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த வெற்றியால் சூப்பர் 12 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் தன்னுடைய கடைசி போட்டியில் அயர்லாந்தை தோற்கடிக்க வேண்டிய மற்றுமொரு கட்டாயத்தில் உள்ளது.

- Advertisement -

நீயா மச்சி இது:
முன்னதாக ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 101/6 என தடுமாறிய போது ஜோடி சேர்ந்து 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோவ்மன் போவல் – அகில் ஹொசைன் ஆகியோர் வெற்றிக்கு கருப்பு குதிரைகளாக செயல்பட்டனர் என்று கூறலாம். அதிலும் குறிப்பாக ஃப்ளசிங் முசர்பாணி வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தை முரட்டுத்தனமாக விளாசிய ரோவ்மன் போவல் டீப் ஸ்கொயர் லெக் திசையில் பிரம்மாண்ட சிக்சராக தெறிக்க விட்டார். ராக்கெட் வேகத்தில் பறந்த அந்த பந்து ரசிகர்களின் இருக்கைகள் மற்றும் விளம்பர பதாகைகளை தாண்டி மைதானத்திற்கு வெளியே மரங்கள் இருக்கும் புதருக்குள் விழுந்தது.

அதனால் வியப்படைந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிசப் இதற்கு 12 ரன்கள் கொடுக்க முடியுமா என்று தனக்கே உரித்தான கணத்த குரலில் தொலைக்காட்சியில் வர்ணனை செய்தார். ஆனால் அதை விட எதிர்புறம் இருந்த சக வீரர் அகில் ஹொசைன் அவ்வளவு பெரிய பிரமாண்ட சிக்சரை பார்த்து “நீயா மச்சி இவ்ளோ பெரிய சிக்சரை அடிச்ச, நல்ல வேளை நான் பவுலராக இல்ல” என்ற வகையில் உறைந்து போய் தலைமீது கை வைத்து அப்படியே சில வினாடிகள் நின்றார். அதன் பின் தம்மிடம் வந்த போவலை பாராட்டும் வகையில் புன்னகைத்த அவருடைய ரியாக்சன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதைத் தொடர்ந்து அந்த சிக்சர் 104 மீட்டர்கள் சென்றதாக தொலைக்காட்சி கணிப்பு வெளியானதை பார்த்து மைதானத்தில் இருந்த ரசிகர்களும் தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களும் வியந்து போய் ரோவ்மன் போவலை பாராட்டுகின்றனர். இப்படி கிட்டத்தட்ட அணியில் இருக்கும் அனைவருமே முரட்டுத்தனமாக அடிக்கும் கிரிக்கெட் வீரர்களாக இருந்தும் பொறுப்புடன் செயல்பட தவறுவதாலேயே வெஸ்ட் இண்டீஸ் இப்படி தள்ளாடுகிறது என்பது உண்மையான ரசிகர்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

Advertisement