
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்தார். அதன் காரணமாக தற்போது சிகிச்சையில் இருந்து வரும் முகமது ஷமி முழு உடற்தகுதி பெற்ற பின்னர் தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டு தற்போது மெல்ல மெல்ல பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் முகமது ஷமிக்கு பதிலாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அந்த போட்டியிலேயே மூன்று விக்கெட் எடுத்து மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்றாலும் அவரது பந்துவீச்சு அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்தது.
ஏனெனில் புதிய பந்தயத்தில் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்வதால் இனிவரும் போட்டிகளில் நிச்சயம் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியுடன் சேர்ந்து விளையாடியது குறித்து பேசிய ஆகாஷ் தீப் கூறுகையில் :
நான் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக விராட் கோலியுடன் இணைந்து ஒரு போட்டியில் விளையாடுகிறேன். இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான விடயம் நடைபெற்றது. ஒருநாள் திடீரென என அழைத்த விராத் கோலி உனக்கு பேட் தேவைப்படுகிறதா? என்று கேள்வி கேட்டார். இப்படி விராட் கோலி பேட் தருகிறார் என்றால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள்.
இதையும் படிங்க : இயன் போத்தம், டேல் ஸ்டைன் உயரத்தில் இருக்கும் அஸ்வினுக்கு இந்திய அணி இதை தான் செய்றாங்க.. டிகே வேதனை
உடனே நான் நீங்கள் பேட்டை கொடுத்தாலும் நான் அதில் விளையாடப்போவதில்லை ஏன் என்றால் அது எனக்கு மிகப் பெரிய பரிசு. அந்த பேட்டை நான் எப்போதுமே என் வீட்டில் பத்திரமாக வைத்திருப்பேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு அவரின் ஆட்டோகிராபையும் பெற்றுக் கொண்டேன் என ஆகாஷ் தீப் கூறியது குறிப்பிடத்தக்கது.