
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை தவறவிட்டதால் இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்களும் எழுந்தன.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோரது பேட்டிங் ஃபார்ம் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக அவர்கள் இருவரும் மீதும் கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவிக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன. இந்நிலையில் ரோகித் சர்மா அமைதியாக ஒருபுறம் ரஞ்சி போட்டிக்கான பயிற்சியில் இறங்கியுள்ள வேளையில் அவர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போதைய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் ரோகித் சர்மா குறித்து கூறுகையில் : ஒரு தலைவர் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் அணிக்கு என்ன தேவையோ அதனை செய்ய வேண்டும். அப்படி செய்வதில் ரோகித் சர்மா அற்புதமான கேப்டன்.
அணியில் உள்ள வீரர்களுக்கு இடையே நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்து நம்மிடம் உள்ள சிறந்த திறனை வெளிக்கொணர்வதில் அவர் கைதேர்ந்தவர். தற்போதைய இந்திய அணியில் எந்த வீரர்கள் அணிக்குள் வந்தாலும் அவர்களை சரியான முறையில் கையாண்டு அவர்களிடம் உள்ள திறமையை ரோகித் சர்மா வெளிக்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க : சச்சின் ஒன்னா தான் ஹோட்டலில் இருப்பாங்க.. இப்போ ரோஹித், கோலின்னு பிரித்தது ஏன்? பிசிசிஐக்கு பதான் கேள்வி
அதுமட்டுமின்றி அணிக்கு தேவையான அனைத்தையும் அவர் செய்கிறார். அந்த வகையில் ரோகித் சர்மா உண்மையிலேயே ஒரு சிறந்த கேப்டன் அவரைப்பற்றி தற்போது இருக்கும் விமர்சனங்கள் எனக்கு வருத்தம் அளிக்கின்றன என ஆகாஷ் தீப் கூறியது குறிப்பிடத்தக்கது.