இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கும் அத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் முகமது ஷமி காயத்திலிருந்து இன்னும் குணமடையாததால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் யாஸ் தயாள் ஆகிய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் பெங்கால் அணியை சேர்ந்த ஆகாஷ் தீப் ஏற்கனவே கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்நிலையில் முகமது ஷமியின் இடத்தில் வங்கதேச தொடரில் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைப்பேன் என்று ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
கடவுளின் படைப்பு பும்ரா:
அதே போல ஜஸ்ப்ரித் பும்ரா கடவுளால் மிகவும் வித்தியாசமாக படைக்கப்பட்ட திறமையை கொண்டவர் என்று ஆகாஷ் தீப் கூறியுள்ளார். எனவே தனித்துவமான அவரிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கும் ஆகாஷ் தீப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் ஒரு பவுலரை மட்டும் அதிகமாக பின்பற்ற மாட்டேன்”
“இந்த உலகில் ஒவ்வொரு பவுலரும் தங்களுடைய சொந்த தனித்துவமான ஆக்சனை கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி வழியை வைத்திருப்பார்கள். நான் ரபாடாவை கொஞ்சம் பின்பற்றுகிறேன். பும்ரா ஒரு லெஜெண்ட். அவரைப் பின்பற்றுவது மிகவும் கடினம். அவர் கடவுளால் தனித்துவமாக படைக்கப்பட்டவர். எனவே அவரிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ள முடியாது”
ஷமியின் இடத்தில்:
“சிராஜிடம் இருந்து கொஞ்சம் கற்றுக் கொள்கிறேன். அப்படி பல்வேறு பவுலர்களிடம் இருந்து நான் சிறிய விஷயங்களை எடுத்துக்கொள்கிறேன். ஆனால் ஒரு பவுலரை மட்டும் நான் அதிகமாக பின்பற்றுவதில்லை. ஷமி பாய் தற்போது காய்மடைந்துள்ளார். எனவே அவருடைய இடத்தில் அணிக்காக விளையாட எனக்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது”
இதையும் படிங்க: கில் எங்கயோ போய்ட்டாரு.. திறமையான ருதுராஜுக்கு அதுவரை சான்ஸ் கிடைப்பது கஷ்டம்.. ஆகாஷ் சோப்ரா
“அந்த வாய்ப்பில் நான் சிறப்பாக விளையாடி தேர்வாளர்கள், அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ என் மீது வைத்த தன்னம்பிக்கையை காப்பாற்ற முயற்சிப்பேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



