வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குகிறது. சென்னையில் துவங்கும் அத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் முகமது ஷமி காயத்தால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகிய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் உள்ளூர் தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் ஆகாஷ் தீப் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்தத் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். அதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையின் முதல் ரவுண்டில் 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியதால் அவருக்கு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மா:
இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் கடந்த இங்கிலாந்து தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானது தம்முடைய அதிர்ஷ்டம் என்று ஆகாஷ் தீப் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் என்னுடைய முதல் போட்டியை ரோஹித் பையா தலைமையில் ராஞ்சியில் விளையாடினேன். என்னுடைய நாட்டுக்காக அறிமுக போட்டியில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்”
“இருப்பினும் ரோஹித் சர்மாவிடம் ஏதோ ஒரு ஸ்பெஷல் விஷயம் இருக்கிறது. ஏனெனில் எனது அறிமுகப் போட்டியில் நான் களமிறங்கிய போது இந்தியாவுக்காக முதல் முறையாக விளையாடுகிறேன் என்ற உணர்வு கூட எனக்கு ஏற்படவில்லை. அந்தளவுக்கு ரோஹித் சர்மா அனைத்தையும் சிறப்பாக கையாண்டு என்னிடம் எளிமையாக நடந்து கொண்டார்”
சச்சின் டெண்டுல்கர் உத்வேகம்:
“அனுபவமற்ற வீரர்களுக்கு அவர் எளிதான திட்டங்களை கொடுத்து கிரிக்கெட்டை எளிதாக்கினார். எனவே ரோஹித் தலைமையில் விளையாடுவது எந்த கிரிக்கெட்டருக்கும் அதிர்ஷ்டமாக இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகள் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் கடினமானது. அதில் உங்களால் சாதிக்க முடிந்தால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அசத்த முடியும்”
இதையும் படிங்க: தோனி வாழ்நாளில் செஞ்சதை ரிஷப் பண்ட் இப்போவே செஞ்சுட்டாரு.. ஆஸியை எச்சரித்த ரிக்கி பாண்டிங்
“ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 நாட்கள் விளையாட வேண்டிய நீங்கள் சில சமயங்களில் 3 – 4 நாட்கள் பந்து வீச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதனாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மனதும் உடலும் வலுவாக இருக்க வேண்டும். உணவு இடைவெளிக்கு முன் 10 – 15 வர்கள் போட்டால் உடல் சோர்ந்து விடும். சச்சின் சார் சிறு வயது முதலே எனக்கு உத்வேகத்தை கொடுத்தவர். பேட்டிங்கை தாண்டி அவருடைய தனிநபர் குணங்களை நான் பின்பற்றுகிறேன்” என்று கூறினார்.



