இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டமானது மார்ச் 2-ஆம் தேதி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டதால் இந்த கடைசி போட்டி இரு அணிகளுக்குமே ஒரு சம்பிரதாய போட்டியாக நடைபெறவுள்ளது. இருந்தாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு செல்ல இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
முகமது ஷமியை பத்திரமாக பயன்படுத்த வேண்டும் : ஆகாஷ் சோப்ரா
மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரையிறுதி போட்டியில் விளையாடும். இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஏனெனில் இந்து தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது பந்துவீசுகையில் காலில் அசவுகரியத்தை உணர்ந்து அடிக்கடி மைதானத்திலிருந்து வெளியேறி ஓய்வறைக்கு சென்று முதலுதவி பெற்றுக்கொண்டு மீண்டும் பந்துவீசி இருந்தார். இதன் காரணமாக இந்த கடைசி போட்டியில் அவருக்கு முன்னெச்சரிக்கை காரணமாக ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் முகமது ஷமியின் ஓய்வு முடிவு குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : என்னை பொறுத்தவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஷமி விளையாடக்கூடாது. அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் விளையாடலாம். ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒருவேளை இந்திய அணி இரண்டாவதாக பந்துவீச நேர்ந்தால் அடுத்த அரையிறுதி போட்டிக்குள் அவர் மீண்டும் முழு உடற்தகுதி பெற்று தயாராவது கடினம்.
எனவே அது முகமது ஷமிக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருந்தார். ஆனால் அவரது இந்த கருத்தை மறுத்து பேசியுள்ள மற்றொரு முன்னாள் வீரரான சஞ்சய் பாங்கர் கூறுகையில் : எந்த ஒரு வீரருக்குமே எப்போது காயம் ஏற்படும் என்று தெரியாது. எனவே முகமது ஷமியை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும்.
இதையும் படிங்க : முகமது ஷமிக்கு விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. அர்ஷ்தீப் சிங்கை ஒருமுறை யூஸ் பண்ணுங்க – ஜாஹீர் கான் அட்வைஸ்
ஏனெனில் அவர் ஏற்கனவே ஒன்றரை ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியிருக்கிறார். எனவே அவர் நிறைய போட்டிகளில் விளையாடினால் தான் அவரால் பழைய ரிதத்திற்கு திரும்ப முடியும். எனவே இந்த போட்டியிலும் விளையாடி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அவர் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என தான் விரும்புவதாக சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



