ஒரு பந்துக்கு கூட ஈடாக மாட்டீங்க – நீங்க இந்தியாவுடன் மோதுறீங்களா ! ரமீஷ் ராஜாவுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

Akash Chopra Ramiz Raja
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடம் 10 அணிகள் பங்கேற்பதால் வழக்கமான 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. வரும் மே 29-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வரும் இந்த தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முழு அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ipl trophy

- Advertisement -

பொறாமையில் ரமீஸ் ராஜா:
கடந்த 2008-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் இன்று உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தரத்திலும் சரி பணத்திலும் சரி தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு வளர்ந்து வரும் இந்த தொடர் இன்று ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பையை விட மிகவும் பிரசித்தி பெற்ற தொடராக மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமெனில் இதே ஐபிஎல் தொடரை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் புதிது புதிதாக டி20 தொடர்களை நடத்திய போதிலும் ஐபிஎல் உச்சத்தை மேற்குறிப்பிட்ட வெளிநாடுகளில் எட்ட முடியவில்லை. குறிப்பாக இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் ஐபிஎல் தொடருக்கு போட்டியாக பிஎஸ்எல் எனும் 20 ஓவர் தொடரை கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறது. ஆனாலும் ஐபிஎல் உயரத்தை எட்ட முடியாமல் தவிக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதற்காக அடிக்கடி பொறாமைப் படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

psl 1

ஆகாஷ் சோப்ரா பதிலடி:
குறிப்பாக அடுத்த வருடம் முதல் ஐபிஎல் தொடரை போல பிஎஸ்எல் தொடரிலும் வீரர்களை வாங்குவதற்கு டிராப்ட் முறைக்கு பதில் ஏல முறை கையாளப்படும் என அறிவித்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அதன்பின் ஐபிஎல் தொடரை புறக்கணித்துவிட்டு பல வெளிநாட்டு வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் விளையாடுவதற்கு வரிசையில் நிற்பார்கள் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஒரு புலியாக நிற்கும் ஐபிஎல் தொடரின் அருகில் ஒரு எலியாக காட்சியளிக்கும் பிஎஸ்எல் தொடரை வைத்துக்கொண்டு ரமீஸ் ராஜா அது போன்ற கருத்தை தெரிவித்தது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் ரமீஸ் ராஜா கூறியது அனைத்தும் நடைமுறையில் சாத்தியமில்லை வெறும் பகல் கனவு என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் (ரமீஸ் ராஜா) கூறியது போல டிராப்ட் சிஸ்டத்துக்கு பதில் ஏல முறையை கையாண்டால் கூட எதுவும் நடக்கப் போவதில்லை. பிஎஸ்எல் தொடரில் எந்த ஒரு வீரரும் 16 கோடிக்கு விளையாடுவதைப் பார்க்க முடியாது. ஏனெனில் அவர்களிடம் உள்ள மார்க்கெட் நிலைமை அதை நடக்க விடாது” என கூறினார்.

Ramiz-raja

ஒரு பந்துக்கு ஈடாகாது:
“இன்னும் சொல்ல வேண்டுமெனில் கடந்த வருடம் விளையாடிய கிறிஸ் மோரிஸ் வீசிய ஒரு பந்தின் மதிப்பை விட இதர தொடர்களில் விளையாடும் வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மிகவும் குறைவானது. அப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடருடன் பிஎஸ்எல், பிக்பேஷ், சிபிஎல் போன்ற தொடர்களை எதன் அடிப்படையில் ஒப்பிடுகிறார்கள் என புரியவில்லை.

- Advertisement -

மேலும் இவை அனைத்தும் ஒரு தொடரை ஒளிபரப்பும் நிறுவனம் அதற்கு எவ்வளவு முதலீடு செய்கிறது என்பதைப் பொருத்ததாகும். அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் 130 கோடி மக்கள் பார்க்கும் ஐபிஎல் தொடருக்கு அதிக தொகை கொடுக்கப்படுகிறது. எனவே இந்தியாவில் உள்ள இந்த சொத்து வேறு எங்கும் கிடையாது” என இதுபற்றி ஆகாஷ் சோப்ரா மேலும் தெரிவித்தார்.

Chris moris IPL
Chris moris IPL

அவர் கூறுவது போல கடந்த வருடம் 16.25 கோடிக்கு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தென்ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் விளையாடினார். அந்த சீசனில் அவர் வீசிய ஒவ்வொரு பந்தின் மதிப்பை கால்குலேட்டரில் கணக்கு பார்த்தால் குறைந்தது ஒரு லட்சத்திற்கும் மேல் வந்தது. இந்த வருடம் கூட லக்னோ அணிக்காக கேஎல் ராகுல் 17 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் பிஎஸ்எல் தொடரில் விளையாடும் பாபர் அசாம் போன்ற உச்சபட்ச நட்சத்திரத்திற்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் வெறும் 2.4 கோடியாகும். எனவே இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஐபிஎல் தொடருடன் பிஎஸ்எல் போன்ற தொடர்கள் போட்டியிட முடியாது என்ற உண்மையை ஆகாஷ் சோப்ரா தெளிவுபடுத்தியுள்ளார்.

csk fans

மேலும் ஐபிஎல் தொடரை இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் பார்ப்பதாலேயே இந்த அளவுக்கு பிரம்மாண்ட வெற்றி பெற முடிகிறது என தெரிவித்துள்ள அவர் இவ்வளவு மக்கள் தொகை பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இல்லை என்பதால் எப்போதுமே ஐபிஎல் தொடரை பாகிஸ்தான் நெருங்க முடியாது என கூறினார்.

Advertisement