கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள விருக்கும் இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இதுவரை இந்திய அணிக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கர் தற்போது இந்த இறுதிப் போட்டிக்கான தன்னுடைய இந்திய அணியை தேர்வு செய்திருக்கிறார்.
அந்த அணியில் இந்திய ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருத்திராத வகையில் ஒரு மாற்றத்தையும் செய்திருக்கிறார் அகார்கர். அவருடைய இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மாவுடன், கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், விளையாடப்போகும் அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரரான மயாங்க் அகர்வாலை தேர்வு செய்து இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரின்போது இந்திய டெஸ்ட் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அறிமுகமான சுப்மன் கில் அந்த தொடரில் மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
ஆனால் அவரை அணியில் இருந்து எடுத்துவிட்டு மயாங்க் அகர்வாலை அணிக்குள் சேர்த்திருக்கிறார் அஜித் அகர்கர். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை சேட்டேஸ்வர் புஜாரா மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இருவருக்கும் அளித்திருக்கும் அவர், இந்திய அணியின் துணைக் கேப்டனான அஜிங்கிய ரஹனேவையும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பன்ட்டையும் அடுத்தடுத்த இடங்களுக்கு தேர்வு செய்திருக்கிறார். ரிஷப் பன்ட் இந்த போட்டியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுநேர ஸ்பின்னர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஷ்வினும், அஜித் அகர்கரின் அணியில் இடம்பிடித்திருக்கின்றனர். வேகப் பந்து வீச்சாளர்கள் பட்டியலைப் பொறுத்தவரை நாம் அனைவரும் எதிர்பார்க்கும் வீரர்களான இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் முஹம்மது ஷமி ஆகியோரைத்தான் அஜித் அகர்கரும் தேர்வு செய்திருக்கிறார். இஷாந்த் சர்மாவிற்கு இங்கிலாந்து ஆடுகளங்களில் அதிகமான அனுபவம் இருக்கிறது. முஹம்மது ஷமியின் பந்துகள் இயற்கையாகவே ஸவிங் ஆகும் தன்மை கொண்டது.
மேலும் இங்கிலாந்து ஆடுகளங்கள் ஸ்விங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதால் இந்த போட்டியில் முஹம்மது ஷமியின் பந்து வீச்சு சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வீரரான பும்ரா கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரிலேயே இங்கிலாந்தில் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். எனவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டானது பேட்டிங் யூனிட்டை விட மிக வலுவானதாக காணப்படுகிறது.
அஜித் அகர்கரின் இந்திய அணி:
01. ரோஹித் சர்மா 02. சுப்மன் கில் 03. புஜாரா 04. விராட் கோஹ்லி 05. ரஹானே 06. ரிஷப் பன்ட் 07. ரவீந்திர ஜடேஜா 08. அஷ்வின் 09. இஷாந்த் சர்மா 10. முஹம்மது ஷமி 11. பும்ரா