இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வுக்குழு கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டு வருகிறது. முதலில் 2024 டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு அவர்கள் 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இருப்பினும் கடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை. அவர்களுடைய தடுமாற்றமான ஆட்டம் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அப்போதும் மனம் தளராத அவர்கள் இங்கிலாந்து தொடரில் கம்பேக் கொடுப்பதற்காக பல வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாரானார்கள்.
நாங்க இருக்க சொன்னோம்:
அத்துடன் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வெல்வதற்கு விராட் கோலியும் முக்கிய பங்காற்றினார். அதனால் சவாலான இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன் அவர்களை தேர்வுக்குழு கழற்றி விட முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின. அதற்கு முன்பாக அவர்களாகவே மரியாதையுடன் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் அனுபவம் தேவை என்பதால் விராட், ரோஹித்தை விளையாடுமாறு சொன்னதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடருக்கு இளம் இந்திய அணி வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் தான் தாங்களாக ஓய்வு பெற்றதாகவும் அகர்கர் கூறியுள்ளார். இது பற்றி என்டிடிவியில் அவர் பேசியது பின்வருமாறு.
அவங்க ரிட்டையராகி போனாங்க:
“அவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட்டின் வலிமைமிக்கவர்கள். எங்களை அணுகிய அவர்கள் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கருத்தில் கொண்டனர். எனவே மக்கள் என்ன நினைக்கிறார்கள், நினைக்கவில்லை என்பதைத் தாண்டி அதுவே உண்மையாகும். அவர்கள் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2027) தொடர் வரை 2 வருடங்கள் விளையாட முடியாது என்று நினைத்தார்கள்”
இதையும் படிங்க: தோத்தாலும் பரவால்ல.. விராட், ரோஹித்துக்காக ஆஸி ரசிகர்கள் இந்தியாவை விரும்புவாங்க.. ஹைடன் பேட்டி
“இங்கிலாந்து தொடரில் அவர்களைப் போன்றவர்கள் அனுபவம் இருப்பதை நாங்கள் விரும்பினோம் என்பதை வெளிப்படையாக சொல்வேன். இருப்பினும் அனுபவம் இல்லாமலேயே இளம் இந்திய அணி தொடரை வெல்லாவிட்டாலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியது. இளம் கேப்டன் தலைமையில் வெளிநாட்டில் வெல்வது கடினம். அதனால் கொஞ்சம் அனுபவம் இருப்பதையே நாங்களும் விரும்பினோம். அதற்காக விராட், ரோஹித்திடம் பேசிய விஷயங்கள் எனக்குள்ளேயே வைத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.



