மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஜிங்க்ய ரஹானே 2015 காலகட்டங்களில் இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடினார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் டெஸ்ட் அணியில் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2016 – 2021 வரையிலான காலகட்டங்களில் விராட் கோலி தலைமையில் இந்தியா தொடர்ந்து நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலித்தது.
அந்த காலகட்டங்களில் ரஹானே துணை கேப்டனாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2020/21 ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா 36க்கு ஆல் அவுட்டாகி வரலாறு காணாத தோல்வியை சந்தித்த போது விராட் கோலி நாடு திரும்பினார். அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானே சதத்தை அடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு திருப்பி விட்டார்.
ஹசி போல முடியும்:
அவருடைய தலைமையில் இளம் வீரர்களுடன் எழுச்சி கண்ட இந்தியா காபா கோட்டையை உடைத்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் கோப்பையை வென்றது. அதன் பின் தடுமாறியதால் கழற்றி விடப்பட்ட ரஹானே ரஞ்சிக்கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கம்பேக் கொடுத்தார். இருப்பினும் அடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பியதால் அவரை இந்திய அணி மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி தம்மை மிஸ் செய்ததாக ரகானே தெரிவித்துள்ளார். மைக் ஹசி போல வயதானாலும் தம்மால் இந்தியாவுக்காக அனுபவத்தை வைத்து நன்றாக விளையாட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அதற்காக தேர்வுக்குழு தம்மை தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
ரஹானே ஆதங்கம்:
“அது வயதைப் பற்றியது கிடையாது. நோக்கத்தைப் பற்றியது. அது டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களுடைய ஆர்வம் மற்றும் அதற்காக நீங்கள் போடும் உழைப்பைப் பொறுத்தது. ஆஸ்திரேலியாவில் மைக்கேல் ஹசி 30 வயதில் அறிமுகமான பின்பும் ரன்கள் குவித்ததை பார்த்தீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் முக்கியம். அந்த வகையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்கு நான் தேவைப்பட்டதாக தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன்”
இதையும் படிங்க: விராட் கோலியிடம் இதை தான் பேசினேன்.. அவரால் அது முடியாதுன்னு சொல்ல காரணமே இல்லை.. வார்னர் பேட்டி
“அதற்கு நானும் தயாராகவே இருந்தேன் என்று கூறினார். 34 – 35 வயதுக்கு பின் வீரர்கள் நன்றாக விளையாடி தங்களது சிறந்த ஆட்டத்தைக் கொடுக்கப் பார்ப்பார்கள். எனவே ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வத்தைக் காட்டினால் அவரை தேர்வாளர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னைப் போன்ற அனுபவ வீரர் அதிக வாய்ப்பை பெற வேண்டுமென கருதுகிறேன். ஆனால் அதற்கான எந்தத் தொடர்பும் இல்லை. இருப்பினும் என்னால் கட்டுப்படுத்த முடிந்த விஷயங்களை மட்டும் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறினார்.



