சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2024 உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோத உள்ளன. அந்தத் தொடரில் மும்பை அணிக்காக அனுபவ வீரர் அஜிங்க்ய ரஹானே விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 432* ரன்கள் குவித்துள்ள அவர் மும்பை ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
குறிப்பாக காலிறுதியில் 94 ரன்கள் அடித்த அவர் செமி ஃபைனலில் 98 ரன்கள் குவித்து 36 வயதிலும் அசத்தி வருகிறார். அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இவர் இந்தியாவுக்காக விளையாடாமல் போய் விட்டாரே என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடிய அனுபவம் டி20 கிரிக்கெட்டில் தமக்கு உதவுவதாக ரஹானே கூறியுள்ளார்.
சிஎஸ்கே அனுபவம்:
குறிப்பாக மற்ற ஐபிஎல் அணிகளில் விளையாடியதை விட சிஎஸ்கே அணியில் சுதந்திரமாக விளையாட தமக்கு ஆதரவு கிடைத்ததாக ரஹானே தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது வெறும் மனநிலை மாற்றம். உலகம் முழுவதிலும் டி20 ஃபார்மட்டில் பயமின்றி சுதந்திரத்துடன் விளையாடுவது மிகவும் முக்கியம். நான் மிகவும் வலுவானவன் கிடையாது”
“அதனால் என்னால் பவர் ஹிட்டிங் செய்ய முடியாது. எனவே பந்துகளை டைமிங் கொடுத்து அடிப்பது அவசியம். 190 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினாலும் இப்போதும் நான் கிளாஸ் ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறேன். டி20 என்பது அனைத்தும் பவர் ஹிட்டிங் மட்டும் கிடையாது. மிடில் ஆஃப், ஆன், கவர்ஸ் திசைக்கு மேலே இடது கை ஸ்பின்னர்களை அடிக்க முயற்சிப்பதை பற்றியதும் ஆகும்”
கம்பேக் ஆர்வம்:
“சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது அவர்கள் சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பை எனக்கு வழங்கினார்கள். களத்திற்கு சென்று என்னுடைய ஆட்டத்தை விளையாடுமாறு அவர்கள் கொடுத்த மெசேஜ் தெளிவாக இருந்தது. ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமான போது நான் அதிரடியாக விளையாடினேன். ஆனால் ராஜஸ்தான் போன்ற மற்ற ஐபிஎல் அணிகளில் நான் நங்கூரமாக விளையாட வேண்டியிருந்தது”
இதையும் படிங்க: சொத்தை வீணடிக்காதீங்க.. அது முடியாது.. நானா பும்ராவா இருந்தா ரிட்டையராகி இதை செய்வேன்.. அக்தர் அட்வைஸ்
“அதனாலேயே 120 – 130 ஸ்ட்ரைக் ரேட்டில் 15 – 16 ஓவர்கள் வரை விளையாடினேன். ஆனால் சிஎஸ்கே அணியில் மெசேஜ் தெளிவாக இருந்தது. இந்தியாவுக்காக அறிமுகமாக முன் 6 வருடங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினேன். இப்போதும் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்கான நெருப்பு மற்றும் ஆர்வம் எனக்குள் எரிந்து கொண்டிருக்கிறது. அதற்காக இப்போதும் ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறேன்” என்று கூறினார்.



