இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றுள்ளது. அதனால் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் செய்த முதல் அணி என்ற உலக சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் முதல் முறையாக 3 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்து இந்தியா தலைகுனிந்துள்ளது.
குறிப்பாக மும்பையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வெறும் 147 ரன்களை துரத்த முடியாமல் இந்தியா பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. அதில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 64 (57) ரன்கள் விளாசி வெற்றிக்கு போராடினார். ஆனால் விராட் கோலி உள்ளிட்ட மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.
ஆட்டநாயகன் அஜஸ்:
நியூசிலாந்துக்கு மொத்தம் 11 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய அஜஸ் பட்டேல் ஆட்டநாயகன் என்பதை வென்றார். இந்நிலையில் மும்பை பிட்ச் ஸ்பின்னர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்ததாக அஜஸ் படேல் தெரிவித்துள்ளார். ஆனால் அதில் ரிஷப் பண்ட் மட்டும் அபாரமாக விளையாடி தங்களுக்கு சவாலை கொடுத்ததாக அவர் பாராட்டியுள்ளார்.
எனவே அவருக்கு மட்டும் வித்தியாசமான திட்டத்தை பின்பற்றி பந்து வீசியதாக அஜஸ் பட்டேல் கூறியுள்ளார். மற்ற இந்திய வீரர்களை சாதாரணமாகவே பந்து வீசி காலி செய்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஸ்பின் பவுலிங் என்பது ரிதத்தை பொருத்ததாகும். நீங்கள் நல்ல விதத்தில் இருக்கும் போது அதை அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”
சவாலான ரிஷப் பண்ட்:
“அதே போல சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் போது நீங்கள் அதில் ஏதாவது செய்ய வேண்டும். இன்று காலையில் சூழ்நிலைகள் நியாயமாக இருந்ததால் நான் தன்னம்பிக்கையுடன் உணர்ந்தேன். ஆனால் ஸ்பின் அடிப்படையில் பிட்ச் எனக்கு அதிகமாக உதவி செய்யவில்லை. இருப்பினும் உணவு இடைவெளிக்கு பின் அது அதிகமாக சுழன்று எனக்கு நிறைய உதவியது. அதை எளிமையாக பயன்படுத்தி நான் பந்தின் வடிவத்தை காற்றில் வைத்து பேட்ஸ்மேன்களுக்கு முன்னோக்கி இருக்க முயற்சித்தேன்”
இதையும் படிங்க: வெற்றியை பறித்த சுமாரான தீர்ப்பு.. 3 – 0 என வீழ்ந்த இந்தியா வரலாறு காணாத தோல்வி.. நியூஸிலாந்து உலக சாதனை
“ரிஷப் பண்ட் இந்தத் தொடர் முழுவதுமே நன்றாக விளையாடி எங்களுக்கு அழுத்தத்தை கொடுத்தார். நல்ல பந்துகளை வீசினாலும் அவர் இறங்கி வந்து என்னை மைதானத்திற்கு வெளியே அடிப்பார் என்பது எனக்கு தெரியும். எனவே அவருக்கு எதிராக கொஞ்சம் வித்தியாசமான திட்டத்தை பின்பற்ற வேண்டி இருந்தது” என்று கூறினார்.



