நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அக்டோபர் பதினாறாம் தேதி பெங்களூருவில் மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணமானது.
அதைத் தொடர்ந்து விளையாடி வரும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 180-3 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது. டாம் லாதம் 15, வில் எங் 33 ரன்களில் அவுட்டானாலும் டேவோன் கான்வே 91 ரன்கள் அடித்து அசத்தினார். களத்தில் டேரில் மிட்சேல் 14*, ரச்சின் ரவீந்திரா 22* ரன்களுடன் இந்தியாவுக்கு சவால் கொடுத்து வருகிறார்கள்.
மோசமான பேட்டிங்:
இந்நிலையில் 365 நாட்களும் விளையாடி கிரிக்கெட்டை பற்றிய விஷயங்களில் ஈடுபடும் இந்திய அணியினர் இப்படி 46க்கு ஆல் அவுட்டாகி ரசிகர்களை தலைகுனிய வைத்துள்ளதாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதை விட ரோகித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் 3 கேட்ச்களை விட்டு மோசமாக ஃபீல்டிங் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி கலர்ஸ் சினிபிளக்ஸ் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இன்றைய நாளில் டாஸ் வென்ற நீங்கள் மற்ற அனைத்திலும் தோல்வியை சந்தித்தீர்கள். உங்களுடைய பேட்டிங் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இருப்பினும் நம்முடைய பவுலர்கள் தங்களால் என்ன முடியுமோ அதை செய்தனர். ஆனால் அவர்களுக்கு நம்முடைய ஃபீல்டிங் போதுமான ஆதரவு கொடுக்கவில்லை”
அதிலும் மோசமான ஃபீல்டிங்:
“எனவே நியூசிலாந்தை ஆரம்பத்திலேயே மடக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அது கைநழுவி போனது. இது போன்ற நாள் இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளது. நீங்கள் கிட்டத்தட்ட வருடத்தின் 365 நாட்களும் விளையாடுகிறீர்கள். அதில் ஒரு மோசமான நாள் இருக்குமேயானால் அது இன்றைய நாளாக தான் இருக்கும்”
இதையும் படிங்க: பிட்ச், முதல் பேட்டிங்கை விட.. இந்தியா 46க்கு ஆல் அவுட்டாக இது தான் உண்மை காரணம்.. அனில் கும்ப்ளே பேட்டி
“இந்த ஸ்கோர் கார்ட் இது நம்முடைய வரலாற்றின் மோசமானது என்பதை காட்டுகிறது. இன்று டாஸ் வென்ற பின் இந்திய அணி விரும்பிய எதுவுமே நடைபெறவில்லை” என்று கூறினார். அந்த வகையில் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து தவறு செய்து விட்டதாக கேப்டன் ரோகித் சர்மாவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இந்த சரிவிலிருந்து இந்தியா குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.



